கள ஆய்வில் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக வேலூர் புறப்பட்டு சென்றார். வேலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாலையிலேயே தனது கள ஆய்வு பணியினை தொடங்கினார். முதலில் சத்துவாச்சாரி, பாரதி நகரில் கட்டப்பட்டு வரும் சுகாதார நல மையத்தினை ஆய்வு செய்தார்.
கள ஆய்வுகளின் முக்கியத்துவத்தை பல்வேறு அரசுத் துறை சார்ந்த ஆய்வுக் கூட்டங்களிலும் வலியுறுத்தி வந்துள்ளார்கள்.அதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் “கள ஆய்வில் முதலமைச்சர்" என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தி, அதன்படி தமிழ்நாடு முதலமைச்சர், முக்கிய அமைச்சர்கள் அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் ஆகியோருடன் மாவட்டங்களுக்குச் சென்று நிர்வாகப் பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளையும், வரும் பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய இரண்டு நாட்களில் வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர் மண்டலத்துக்குபட்ட வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய நான்கு மாவட்ட ஆட்சியர்களுடன் “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற திட்டத்தை தொடங்கி வைத்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதில் தலைமை செயலாளர் இறையன்பு உட்பட 4 மாவட்ட ஆட்சியர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாமல் உள்ள கோரிக்கைகள், பொதுமக்களின் மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், நிலுவையில் உள்ள புகார் மனுக்கள் குறித்தும் ஆலோசனை நடத்துகிறார் .
கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் அதிகாலையிலேயே ஆய்வுக்கு சென்ற முதலமைச்சர் வேலூரில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு உணவு பரிமாறினார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டி தயார் செய்யும் உணவு கூடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆய்வு செய்தார். பிறகு சத்துவாச்சாரி காந்திநகர் பகுதியில் உள்ள அரசினர் ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளியை ஆய்வு செய்விட்டு, அங்கிருந்து கிளம்பி அலமேலுமங்காபுரம் நடைபாதை பகுதியில் செயல்பட்டு வரும் அரசினர் ஆதிதிராவிடர் நலப் பள்ளிக்கு சென்றார். பிறகு காலை சிற்றுண்டி தயார் செய்யும் இடத்திற்கு சென்று அங்குள்ள உணவை சாப்பிட்டு பார்த்து அதன் தரத்தையும் ஆய்வு செய்து, பின்னர் மாணவர்களுக்கு உணவு பரிமாறினார்.