செய்திகள்

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மேலும் நான்கு புதிய நீதிபதிகள் பதவியேற்பு!

கல்கி டெஸ்க்

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக மேலும் நான்கு நீதிபதிகள் இன்று பதவியேற்று இருக்கின்றனர். உயா் நீதிமன்ற தலைமைப் பதிவாளா் பி.தனபால், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆா்.சக்திவேல், சென்னை தொழிலாளா் நீதிமன்ற முதன்மை நீதிபதி சி.குமரப்பன், கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கே.ராஜசேகா் ஆகிய நான்கு பேர் மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் பதவியில் இருந்தனர். இவர்கள் நான்கு பேரையும் சென்னை உயா் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவா் திரௌபதி முர்மு உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இந்த நிலையில் இன்று புதிய நீதிபதிகள் பதவியேற்பு நிகழ்ச்சி, சென்னை உயர் நீதிமன்றம் வளாகத்தில் உள்ள கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, புதிய நீதிபதிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். புதிதாகப் பதவியேற்ற நீதிபதிகளை தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் வரவேற்றார். அப்போது அவர், ‘புதிய நீதிபதிகளான சக்திவேல், தனபால் மற்றும் குமரப்பன் ஆகியோர் உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர்களாகவும், நீதிபதி ராஜசேகர் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலராகவும், உயர் நீதிமன்றத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததால், உயர் நீதிமன்றத்தின் மரபுகளை உறுதிப்படுத்துவார்கள்’ என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் பேசுகையில், ‘பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட நீதிபதிகளாகப் பணியாற்றிய புதிய நீதிபதிகளின் அனுபவம் சிறந்த முறையில் பலனளிக்கும்’ என்று பேசினார். மேலும், பல வழக்கறிஞர் சங்கங்களின் நிர்வாகிகள் புதிய நீதிபதிகளை வரவேற்றுப் பேசினர்.

அதனையடுத்து, ஏற்புரையாற்றிய நீதிபதி சக்திவேல், ‘உயர் நீதிமன்றத்தின் கண்ணியத்தைக் காக்கும் வகையில் பணியாற்றுவதற்கு உரிய பலத்தை இயற்கை தனக்கு வழங்க வேண்டும்’ எனத் தெரிவித்தார். அதனையடுத்துப் பேசிய நீதிபதி தனபால், ‘பள்ளிப்படிப்பு முதல் தமிழ் வழியில் படித்தேன். தமிழ் வழியில் படித்த வழக்கறிஞர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகக் கருத வேண்டாம். இயலாதது என்று எதுவுமில்லை’ என்று பேசினார். அதேபோல், நீதிபதி குமரப்பன் பேசுகையில், ‘நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வலுப்படுத்தவேண்டும்’ என்று பேசினார்.

புதிதாகப் பதவியேற்றிருக்கும் நான்கு நீதிபதிகளுடன் சேர்த்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்து இருக்கிறது. மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்னும் 11 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஏழைகளின் மலைப் பிரதேசம்... கல்வராயன் மலை..!

எழுத்தாற்றலை வளர்த்துக்கொள்ள சுஜாதா கூறிய எளிய வழிகள்!

குட் பேட் அக்லி படத்தின் புதிய அப்டேட்… ரசிகர்கள் உற்சாகம்!

Fake Paneer: போலி பனீரை எப்படி கண்டுபிடிக்கணும் தெரியுமா?

கருத்து சுதந்திர நாளான பத்திரிகை சுதந்திர தினம்!

SCROLL FOR NEXT