செய்திகள்

‘கீதா பிரஸ்’ ஸுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான காந்தி அமைதிப் பரிசு விருது!

கார்த்திகா வாசுதேவன்

2021 ஆம் ஆண்டிற்கான காந்தி அமைதிப் பரிசு கோரக்பூரில் உள்ள கீதா பிரஸ்ஸுக்கு வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நடுவர் குழு, ஜூன் 18, 2023 அன்று உரிய விவாதங்களுக்குப் பிறகு, அகிம்சை மற்றும் பிற காந்திய முறைகள் மூலம் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்திற்கான சிறந்த பங்களிப்பைத் தொடர்ந்து செய்து வருவதற்காக கீதா பிரஸ்ஸை விருது பெறத் தகுதியுடைய நிறுவனமாகத் தேர்வு செய்வதென ஒருமனதாக முடிவு செய்தது. முடிவு குறித்த அறிவிப்பு கலாச்சார அமைச்சகம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப் பட்டுள்ளது .

1923 இல் நிறுவப்பட்ட கீதா பிரஸ், 16.21 கோடி எண்ணிக்கையிலான ஸ்ரீமத் பகவத் கீதை உட்பட 14 மொழிகளில் 41.7 கோடி புத்தகங்களை வெளியிட்டுள்ள உலகின் மிகப்பெரிய பதிப்பகங்களில் ஒன்றாகும். “நிறுவனம் வருமானம் ஈட்டுவதற்காக அதன் வெளியீடுகளில் விளம்பரங்களை ஒருபோதும் நம்பியதில்லை. கீதா பிரஸ், அதனுடன் இணைந்த அமைப்புகளுடன் இணைந்து, வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கும், அனைவரின் நல்வாழ்விற்கும் பாடுபடுகிறது,” என்று கலாச்சார அமைச்சகம் கூறியது.

காந்தி அமைதிப் பரிசு என்பது மகாத்மா காந்தியின் 125வது பிறந்தநாளின் போது, ​​மகாத்மா காந்தியால் பின்பற்றப்பட்ட கொள்கைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில், 1995 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் நிறுவப்பட்ட வருடாந்திர விருதாகும். இந்த விருது தேசியம், இனம், மொழி, சாதி, மதம் அல்லது பாலினம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து நபர்களுக்கும் அவரவர் சாதனை, திறமை மற்றும் சேவை மனப்பான்மையின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. இந்த விருது 1 கோடி ரூபாய் பரிசுத்தொகை, பாராட்டுப் பத்திரம், பட்டயம்  மற்றும் நேர்த்தியான பாரம்பரிய கைவினைப் பொருள் அல்லது கைத்தறிப் பரிசுப்பொருளைக் கொண்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ராமகிருஷ்ணா மிஷன், பங்களாதேஷின் கிராமீன் வங்கி, கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா, பெங்களூருவின் அக்‌ஷய பத்ரா, இந்தியாவின் ஏகல் அபியான் டிரஸ்ட், புது டெல்லியின் சுலப் இன்டர்நேஷனல் உள்ளிட்ட  அமைப்புகளுக்கு கடந்த ஆண்டுகளில் இவ்விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா, தான்சானியாவின் முன்னாள் ஜனாதிபதி ஜூலியஸ் நியரேர், இலங்கை சர்வோதய ஷ்ரமதான இயக்கத்தின் நிறுவனர் ஏ.டி.அரியரத்ன, ஜெர்மனியின் பெடரல் குடியரசின் ஜெஹார்ட் பிஷர், பாபா ஆம்தே, போன்ற பிரபலங்களுக்கும் இந்த விருது வழங்கப் பட்டுள்ளது. ஜான் ஹியூம், அயர்லாந்து, வக்லாவ் ஹேவல், செக்கோஸ்லோவாக்கியாவின் முன்னாள் அதிபர், தென்னாப்பிரிக்காவின் பேராயர் டெஸ்மண்ட் டுட்டு, சண்டி பிரசாத் பட் மற்றும் யோஹெய் சசகாவா (ஜப்பான்) போன்றவர்களும் இவ்விருதைப் பெற்றுள்ளனர்.

சமீபத்தில் 2019 ஆம் ஆண்டுக்கான காந்தி அமைதிப்பரிசு விருது  ஓமன் சுல்தான் கபூஸ் பின் சைத் அல் சைட்டுக்கும், 2020 ஆம் ஆண்டுக்கான விருது  வங்கபந்து என்றழைக்கப்படும் வங்காள தேசத்தின் தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மானுக்கும் வழங்கப்பட்டது.

மேற்கு வங்கம் சென்றால் இந்த பஞ்சரத்னா கோவிலுக்குக் கட்டாயம் செல்லுங்கள்!

மாங்காய் ரசம் மற்றும் மாங்காய் சட்னி பண்ணலாம் வாங்க!

இப்படியெல்லாம் செய்யலாமா? செய்தால், அனுபவித்துதானே ஆகணும்!

தோட்டக்கலைப் பண்ணையில் சோதனைகளை சாதனைகளாக மாற்றிய பெண் விவசாயி ஜெயந்தி!

வானவில் ஆறு ‘கேனோ கிரிஸ்டல்ஸ்’ (Cano Crystales River) பற்றித் தெரியுமா உங்களுக்கு?

SCROLL FOR NEXT