கூகுள் நிறுவனத்தில் செலவுகளைக் குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதி நடவடிக்கையாக மூத்த நிர்வாகிகளின் இந்த ஆண்டுக்கான சம்பளத்தில் குறிப்பிட்ட அளவை குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தனது ஊழியர்களுக்குப் பணிநீக்கம் குறித்து அனுப்பிய ஈமெயிலில் 25 வருடத்தில் மிகப்பெரிய அளவில் பணிநீக்கம் செய்வதற்காக நிறுவனம் தள்ளப்பட்டத்திற்கு முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என அறிவித்திருந்தும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ரெசிஷன் மற்றும் வட்டி விகித உயர்வுக்குப் பின்பு பணிநீக்கம் மற்றும் சம்பள குறைப்பு செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளோம் என விளக்கம் கொடுத்தார் நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை.
கூகுள் நிறுவனத்தில் நடந்த முக்கியமான கூட்டத்தில், அதன் நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, நிறுவனத்தின் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக உயர் அதிகாரிகள் சம்பளத்தைக் குறைக்க உள்ளோம். கூகுள் நிறுவனத்தின் 25 வருட வரலாற்றில் மிகப்பெரிய பணிநீக்கத்திற்குப் பின்பும் இந்தச் சம்பள குறைப்பு முக்கியமானதாக விளங்குகிறது எனப் பேசியுள்ளார்.
கூகுள் நிறுவனம் பணிநீக்க அறிவிப்பை மிகவும் தாமதமாக அறிவித்தாலும், இதன் அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் பெரிய அளவிலான கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுக்க முடியாது. கூகுள் உலகம் முழுவதும் தனது மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் சுமார் 12,000 பேரை பணிநீக்கம் செய்து சுமார் 6 சதவீத ஊழியர்களைக் குறைத்தது.
மேலும் இந்தச் சம்பள குறைப்பு அனைத்து ஊழியர்களுக்கும் அறிவிக்காமல் மூத்த துணைத் தலைவர்கள் சீனியர் வைஸ் பிரசிடெண்ட் (Senior Vice President) நிலைக்கு மேலே உள்ள அனைத்துப் பதவிகளில் இருக்கும் ஊழியர்களுக்கும் இந்தச் சம்பள குறைப்பு நடைமுறைப் படுத்தப்பட உள்ளது. மேலும் இப்பிரிவு ஊழியர்களின் வருடாந்திர போனஸ் தொகையிலும் அதிகப்படியாக குறைக்கப்படும்.
இந்தப் பணிநீக்கம் மற்றும் சம்பள குறைப்பு மட்டும் அல்லாமல் இதேநேரத்தில் கூகுள் செலவுகளைக் குறைக்கும் விதமாக Pixelbook laptop மற்றும் கேம் ஸ்ட்ரீமிங் தளமாக Stadia ஆகிய இரு பிரிவையும் மூடியதும் குறிப்பிடத்தக்கது.