சென்னை மாநகராட்சி பள்ளிகளில் அறிவியல் மற்றும் திறன் மேம்பாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் கட்டணமில்லா கல்வி சுற்றுலாவாக துபாய் செல்ல இருக்கிறார்கள்.
தமிழக அரசு, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த, பல நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறது. மாணவர்களின் திறன்களைக் கண்டறிந்து அவற்றை மேம்படுத்தவும் பல வழிகளில் உறுதுணையாக இருக்கிறது. இதன் காரணமாக அரசு பள்ளி மாணவர்கள் பல துறைகளில் சாதித்துக் காட்டுவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். முன்பு இருந்ததை விட தற்போது மாணவர்களின் கல்வித்தரம் உயர்ந்திருப்பதையே இது காட்டுகிறது.
சென்னை மாநகராட்சியுடன் இணைந்து 'விங்ஸ் டு ஃபிளை' என்ற தன்னார்வ அமைப்பு, மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கிடையே ஒவ்வொரு ஆண்டும் அறிவியல் ஆய்வு, திறன்வளர்ச்சி ரீதியான போட்டிகளை நடத்துகிறது. இதில் வெற்றி பெறும் மாணவர்கள் அமெரிக்கா, ஜெர்மனி, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலாவும் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். 2022-23ஆம் கல்வியாண்டில் தொழில் முனைவோர் திறன்மேம்பாடு என்ற தலைப்பில், புதிய யோசனைகளை செய்முறை அறிக்கையாக சமர்ப்பிக்க மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன.
சுமார் 10,000 மாணவர்கள் பங்கேற்ற நுழைவுத் தேர்வில் 478 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பல நிலைகளாக போட்டிகள் நடைபெற்றது. இதில் இறுதி சுற்றுக்கு தேர்வானவர்களில் 9 மாணவர்கள் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த மாணவர் களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் உணவு தங்குமிடம், விமானப் பயணம் உள்ளிட்டவற்றிற்கு ஒரு ரூபாய் கூட கட்டணம் இல்லாமல் ஐந்து நாட்கள் துபாய் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.
இந்த மாணவர்களை நேரில் சந்தித்த மாநகராட்சி மேயர் பிரியா, நினைவுப் பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார். முதன்முறையாக விமானத்தில் பறக்கவிருக்கும் உற்சாகத்தில் துபாயிலுள்ள முக்கிய இடங்களான புர்ஜ் கலிபா, துபாய் பிரேம், துபாய் பாரம்பரிய அருங்காட்சியகம் ஆகியவற்றை பார்வையிட உள்ளதாகவும், பாலைவனத்தில் ஒட்டக சவாரி செய்ய விரும்புவதாகவும் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் தெரிவிக்கின்றனர்.
கல்வி அறியும் விடாமுயற்சியுடன் கூடிய தன்னம்பிக்கையும் இருந்தால், துபாய் என்ன நிலவிற்கும் சென்று சாதிக்க முடியும் என்கிறார்கள் சென்னை மாநகராட்சி மாணவ மாணவிகள்.