தமிழகத்தில் கோடை வெப்பம் கோரத்தாண்டவம் ஆடிக் கொண்டிருந்த நிலையில், கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் தணிந்துள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். இந்நிலையில் வரும் 19ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது, “மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால், தமிழகத்தில் மே 16 முதல் 19ஆம் தேதி வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், காரைக்கால் புதுவை போன்ற இடங்களில் பலத்த காற்றுடனும் மழை பெய்யக்கூடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், திருநெல்வேலி, தென்காசி, நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிகமா மழைக்கு வாய்ப்புள்ளதால் இந்த 7 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த மழையானது சில இடங்களில் மே 22 ஆம் தேதி வரை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளனர். சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், சில பகுதிகளில் மட்டும் மிதமான மழை பெய்யலாம் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் கோடை மழை காரணமாக 19ஆம் தேதி வரை குமரிக் கடல் பகுதிகள் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த திடீர் கோடை மழை வெப்பத்தைத் தணித்து பொதுமக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், அறுவடை சமயத்தில் இருக்கும் பயிர்களுக்கு பாதகமான விளைவையே ஏற்படுத்தும். இதனால் விவசாயிகள் பெரும் வருத்தத்தில் இருக்கின்றனர். அதேநேரம் புதிதாக நடவு போட்ட சில விவசாயிகள், மழை காரணமாக மகிழ்ச்சியாகவும் உள்ளனர்.