செய்திகள்

அதிக சுமை, அதிக பாதிப்பு – புத்தகப் பையின் மீது கவனம் கொள்வோமா?

சேலம் சுபா

விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்தாயிற்று. பள்ளிப் பைகள் வாங்கும் அங்காடியில் ஒரு பிள்ளையின் தந்தை வெகு நேரமாக ஒவ்வொரு பையையும் ஆராய்ந்து இறுதியில் ஒரு பையைத் தேர்ந்தெடுத்தார். அவருக்கு முன் வந்தவர்கள் பிள்ளைகள் சுட்டிக் காண்பித்த பையை வாங்கிச்செல்ல இவர் மட்டும் ஒரு பை வாங்க இவ்வளவு நேரம் எடுத்ததைக் கவனித்த கடை ஊழியர்   “என்ன சார் நீங்க மட்டும் இவ்வளவு நேரம் தேடுகிறீர்கள்? ஒரு ஸ்கூல் பேக் வாங்க இவ்வளவு மெனக்கெடல் தேவையா?” எனக் கேட்க, அவர் “என்ன இப்படிக் கேட்கறீங்க என் மக இப்பதான் முதல் வகுப்பு போகிறாள். குழந்தையால வெயிட்டைத் தூக்க முடியாது. அதனால் இரண்டு மூன்று அரை இருக்கிற பையா இருந்தா கொஞ்சமாவது வெய்ட் தெரியாது. அதே போல கொஞ்சம் கெட்டியா இருக்கற தோள்பட்டை பைகள் எடுத்துட்டுப் போறதுக்கு சிரமமா இருக்காது அதான்...

பள்ளிகள் திறந்ததும் இனி பிள்ளைகள் பற்றிய கவலை கொஞ்சம் குறையும் என்று ஆனந்தம் கொள்ளும் பெற்றோர்களே, என்றாவது அவர்கள் சுமக்கும் புத்தகப்பையின் கனத்தைப் பற்றி யோசித்ததுண்டா? ஆம். அதிக சுமை நிறைந்த புத்தக பைகள் மாணவர்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். இதை உணர்ந்து பெற்றோரும் ஆசிரியர்களும் செயல்பட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். எல் கே ஜியில் சுமக்கும் பொதியை பிளஸ் டூ வரை சுமக்க வேண்டியுள்ளது. ஒரு  குழந்தையின் உடல் எடைக்கு எடையை விட 10 சதவீதம் அதிகம் எடை கொண்ட பையை எடுத்து செல்வதால் முதுகு இடுப்பு தோள்பட்டை மற்றும் கைகளில் வலி. சுவாசக் கோளாறு, கூன் முதுகு போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்று ஆய்வுகள் கூறுகிறது.

அம்மா முதுகு ரொம்ப வலிக்குதும்மா என்று வலியில் முகம் சுருங்கியபடியே சொல்லும் குழந்தைகளின் வலியை அலட்சியம் செய்யும் பெற்றோர்களுக்கு, இப்போது உங்கள் குழந்தைகள் சொல்வதை அலட்சியப் செய்தால் பிற்காலத்தில் பாதிக்கப்படப் போவதும் அவர்களே என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதிக சுமைகளால் பிள்ளைகள்  மிகுந்த மன உளைச்சலுக் குள்ளாகி வருவதாக  ஆய்வுகள் தரும் அதிர்ச்சி தகவலை நாம்தான் அலட்சியப்படுத்துகிறோம். கடந்த சில ஆண்டுகளாக பள்ளிப் பைகளின்  எடைக்கும், வளரும் குழந்தையின் பிஞ்சு எலும்புக்கும் உள்ள தொடர்பை பற்றி யாரும் கவலைப்படுவதே இல்லை. பெற்றோருடன் பள்ளி நிர்வாகங்களும் அதில் அதிக கவனம் செலுத்தவில்லை என்பதும் உண்மை. அதே நேரத்தில் பள்ளிப் புத்தக எடை விஷயத்தில் அரசு சில வழிமுறைகளை உருவாக்கி உள்ளது வரவேற்கத்தக்கது. ஒன்றிய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஒவ்வொரு மாணவர்களுக்கும் வகுப்பு வாரியாக எவ்வளவு எடையை வைக்க வேண்டும் என்று அறிவியல் ரீதியாக முறைப்படுத்தி உள்ளது. உதாரணமாக 3  முதல் 5 வயது வரையிலான பிள்ளைகள் 2.5 கிலோ எடை கொண்ட பைகளை மட்டுமே சுமக்க அனுமதித்துள்ளது. ஆனால் இதை எத்தனை பேர் அறிவோம்?

    இந்த பிரச்சனையைத் தவிர்ப்பது எப்படி என்று பார்ப்போம். முதலில் பெற்றோர் பிள்ளைகளின் எடைக்குத் தகுந்த  பைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு பக்க தோள்பட்டை பைக்கு பதிலாக இரண்டு பக்க தோள்பட்டை கொண்ட பைகள் நல்லது. பட்டைகள் தடிமனாகவும் அதே நேரத்தில் சமமாகவும் இருக்க வேண்டும். முதுகு பையின் உயரம் குழந்தையின் இடுப்புக்கு கீழே இருக்க வேண்டும்.  பைகள் வாங்கும்போது அதில் அறைகள் அதிக அளவில் இருக்கும்படி தேர்வு செய்ய வேண்டும். அதிக எடை உள்ள புத்தகத்தை பையின் நடுவில் இருக்கும் அறையில் வைக்க வேண்டும். பள்ளிக்குத் தேவைப்படும் புத்தகங்களை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். சில பாடங்களுக்கு இரண்டுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருக்கலாம். அப்போது மாணவர்கள் அந்த நாளுக்கான பாடத் தலைப்பு என்னவென்பதை அறிந்து அதற்கேற்ற புத்தகத்தை எடுத்துச் செல்ல வேண்டும். மாணவர்கள் தினசரி தேவையான புத்தகங்களை மட்டும் எடுத்துச் செல்ல பழகவேண்டும். இது பையின் எடையைக் குறைக்கும். முக்கியமாக பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட நீரை மாணவர்கள் பயன்படுத்த வசதிகள் இருந்தால் குடிநீர் சுமந்த பாட்டிலின் கனம் குறையும். பள்ளி வகுப்பறைகளில் மாணவர்களுக்கு பிரத்யேகமாக மேஜை அறைகள் இருந்தால் தேவைப்படும் புத்தகங்களை  அதில் வைத்துச் செல்லலாம்.  இது போன்ற பல்வேறு வழிமுறை களில் புத்தகப் பைகளின் எடையைக் குறைத்து எதிர்கால இளைய தலைமுறையை உடல் பாதிப்புகளில் இருந்து  விடுவிக்கலாம் என்பது சமுக ஆர்வலர்களின் கருத்து.

    குறிப்பாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் சுமைகளைக் குறைத்து அவர்களை நிமிர்ந்து நடக்க செய்வது சிறப்பு.

குளிர்கால சரும பராமரிப்பு - 5 பொருட்கள் போதுமே!

டென்னிஸ் உலகை ஆண்ட ரபேல் நடாலின் வெற்றிக் கதை!

செல்லப்பிராணி வளர்ப்பு முறையும் மழைக்கால பராமரிப்பு மற்றும் நன்மைகள்!

Book Review - The Thirteenth Child - by Erin A. Craig (2024)

சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசு!

SCROLL FOR NEXT