தனி தெலங்கான இயக்கத்தை முன்னெடுத்து 2014 முதல் தெலங்கான ராஷ்டிர சமிதி கட்சியை வெற்றிக்கு இட்டுச் சென்று, மூன்றாவது முறையாகவும் ஆட்சியை பிடித்துவிடலாம் என நினைத்த பாரத் ராஷ்டிர சமிதி தலைவர் மற்றும் முதல்வருமான கே.சந்திரசேகர ராவின் கனவு தகர்ந்துவிட்டது. பாரத ராஷ்டிர சமிதிக்கு இது முதல் தோல்வியாகும்.
தெலங்கானவில் மொத்தம் உள்ள 119 இடங்களுக்க நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 64 இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்துள்ளது. பார ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சிக்கு 39 இடங்களே கிடைத்துள்ளன. ஒருவாரம் என்பதே அரசியலில் நீண்ட காலம் என்று சொல்லுவார்கள். அதிலும் ஒன்பதரை ஆண்டுகள் என்பது மிக நீண்டகாலம். அதுதான் மிகப்பெரிய சவால்.
தேர்தல் பிரசாரத்தின் போது பி.ஆர்.எஸ். கட்சி மக்கள் நலத் திட்டங்களை முன்வைத்து பிரசாரம் செய்ய நினைத்தது. ஆனால், அவற்றில் சிலவற்றை செயல்படுத்துவதில் தாமதம், நிதி ஒதுக்கியதில் முறைகேடு என பல்வேறு புகார்கள் எழுந்தன.
கே.சி.ஆரின் மகனும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சருமான கே.டி.ராமராவ், அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன, உள்நாட்டு உற்பத்தியும் தெலங்கானில்தான் அதிகம் என பேசி வந்தாலும் வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என பரவலாக புகார் எழுந்தது.
மேலும் சட்டப்பேரவைத் தேர்தலில் புதுமுகங்களுக்கு வாய்ப்புத்தர வேண்டும். ஏறக்குறைய 30 எம்.எல்.ஏ.க்கள் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர் என்று கே.டி.ராமராவ், தந்தை கே.சி.ஆரிடம் கூறிய போதிலும் அதை அவர் காதில் போட்டுக் கொள்ளவில்லை. விளைவு அவர்கள் அனைவரும் தேர்தலில் தோற்றார்கள்.
அதே நேரத்தில் பி.ஆர்.எஸ். கட்சியின் தலைவர்களில் 10 இல் 9 பேர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளனர்.
பி.ஆர்.எஸ். கட்சி வெற்றிபெற்ற 39 தொகுதிகளும் ஹதராபாத் பிராந்தியத்தைச் சேர்ந்தவை. இங்குதான் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. வளர்ச்சியும் இருந்துள்ளது. அதனால் மக்கள் அக்கட்சிக்கு வாக்களித்துள்ளனர். பி.ஆர்.எஸ். மீண்டுவர வேண்டுமானால் ஊரகப் பகுதி மக்கள் மனதிலும் அவர்கள் இடம்பிடிக்க வேண்டும்.