லைக் போட்டால் லாபம் கிடைக்கும் எனக் கூறி, நாடு முழுவதும் மோசடி செய்த குஜராத் மற்றும் மும்பையைச் சேர்ந்த கும்பலை சைபர் கிரைம் போலீசார் கூண்டோடு பிடித்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் வெளியாகும் வீடியோக்களுக்கு லைக் போடச் சொல்லி அரங்கேறும் மோசடிகள் தொடர்பான புகார்கள், சமீப காலமாக சைபர் கிரைம் போலீசாருக்கு அதிக அளவில் வருகின்றன. இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் போன், ஒரு வாட்ஸ் அப் செயலி, பேடிஎம் அல்லது கூகுள் பே உடன் இணைக்கப் பட்ட ஒரு வங்கிக் கணக்கு. இவை இருந்தால் போதும் கை நிறைய சம்பாதிக்கலாம் என மோசடி கும்பல் ஆசையைத் தூண்டுகிறது.
அதற்கு உடன்படுவோருக்கு வீடியோக்களை அனுப்பி அதன் மீது லைக்குகளை பதிவு செய்யக் கூறுகின்றனர். நட்சத்திர ஹோட்டல்கள் அல்லது குறிப்பிட்ட பொருட்கள் தொடர்பான விளம்பர வீடியோவாக அது இருக்கலாம். அந்த வீடியோவுக்கு போடும் லைக்குகளுக்கு ஏற்ப பணம் கிடைக்கும் என்று கூறுவதோடு, ஒரு குறிப்பிட்ட தொகையை முன் பணமாக செலுத்தினால் இன்னும் அதிக லாபம் அடையலாம் என்றும் ஆசையைத் தூண்டுகின்றனர்.
அதன்படி செலுத்தப்படும் பணத்தை சுருட்டிக்கொண்டு, அனைத்து தொடர்புகளையும் துண்டித்துவிட்டு கம்பி நீட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர் ஆன்லைன் திருடர்கள். இத்தகைய லைக் மோசடி கும்பலிடம் ஏமாந்தவர்களில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த கெமிக்கல் இன்ஜினியரும் ஒருவர். அவர் அளித்த புகாரின் பேரில் நாக்பூர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியதில், அப்போது நாடு முழுவதும் இதுபோன்ற லைக் மோசடி நடப்பது உறுதி செய்யப்பட்டது. அவற்றில் சில சம்பவங்கள் ஒரே மாதிரியான மோசடியாக இருந்ததால் அதன் பின்னணியில் இருக்கும் கும்பலை கூண்டோடுப் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது குஜராத் மாநிலம் சூரத் நகரை மையமாக வைத்து லைக் மோசடி கும்பல் இயங்குவது தெரியவந்தது. அதன் பின்னணியாக செயல்பட்ட முக்கிய நபரை போலீசார் வளைத்துப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவருக்கு கீழ், மற்றொரு லைக் மோசடி கும்பல் மும்பையில் பதுங்கி செயல்பட்டு வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களை அதில் ஈடுபடுத்தி, பணம் பறிப்பதும் உறுதி செய்யப்பட்டது. மோசடி பணத்தை கிரிப்டோ கரன்சியாக மாற்றி, சீனாவிலுள்ள தனிநபர் ஒருவருக்கு பரிமாற்றம் நடைபெற்று இருப்பதாகவும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் மும்பையில் பதுங்கியிருந்த லைக் மோசடி கும்பலையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதுபோன்று லைக் போட்டால் பணம் கிடைக்கும், காணொளி பார்த்தால் பணம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறும் கும்பலை நம்பி யாரும் பணத்தை இழந்து விட வேண்டாம் என போலீசார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.