முன்னதாக அண்டை நாடுகளில் நடந்த கொலை சம்பவங்களின் பின்னணியில் இந்தியாதான் உள்ளது என்று அமெரிக்கா உட்பட சில நாடுகள் குற்றம்சாட்டின. அதற்கு தற்போது அமைச்சர் ஜெய்சங்கர் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கனடாவில் சீக்கிய தலைவர் கொலை வழக்கில், இந்திய உளவாளிகள் மீது அந்நாட்டு அரசு வெளிப்படையாக குற்றம் சாட்டியது. அதேபோல், அமெரிக்காவில் சீக்கிய தலைவரை கொல்ல முயற்சித்த பின்னணியில் இந்தியா இருக்கிறது என்று அமெரிக்காவும் குற்றம்சாட்டியது. இந்த இரண்டு சம்பவங்களை அடுத்து, பாகிஸ்தானில் 20க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டதிலும் இந்தியா இருப்பதாக சமீபத்தில் பிரிட்டனின் கார்டியன் இதழில் செய்தி வெளிவந்திருந்தது.
ஏனெனில், கொலை செய்யப்பட்ட இந்த 20 பேரில் புல்வாமா தாக்குதலுக்குக் காரணமானவர்களும் அடங்கும். அதாவது லஷ்கர் – இ- தொய்பா கமண்டர் ரியாஸ் அகமது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொல்லப்பட்டார். அதேபோல் காலிஸ்தான் கமாண்டோ படையின் தலைவரான பரம்ஜித் சிங்கும் கடந்த மே மாதம் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுபோலதான் 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்று பாகிஸ்தான் பெயர்களை அடுக்கியுள்ளது. இந்தக் கொலைகளுக்கு காரணம் இந்தியாதான் என்றும் பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.
கார்டியன் இதழில், ‘ரஷ்யாவின் கேஜிபி, இஸ்ரேலின் மொசாட் உள்ளிட்ட உளவு அமைப்புகள் போல இந்தியாவும் ஒரு அமைப்பை உருவாக்கி செயல்படத் தொடங்கியிருக்கிறது. இதற்கு தனியாக ஒரு அமைப்பையும் இந்தியா உருவாக்கியிருக்கிறது.’ என்றும் எழுதியிருந்தது.
இந்த குற்றச்சாட்டுக்கு மத்திய வெளியுறவுத்துறை மறுப்பு தெரிவித்தது. ஆனால் இதற்கு சில அமைச்சர்கள் இந்த இதழின் செய்தியை ஆமோதிக்கும் விதமாக பதிலளித்தும் வருகின்றனர்.
இந்தவகையில், நேற்று புனேவில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துக்கொண்ட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்களிடம் பேசினார். அதாவது, “ ஒருமுறை மும்பையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. பதில் தாக்குதலுக்கு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இறுதியில் அந்த முடிவு கைவிடப்பட்டது. மும்பையில் நடந்தது போல் மீண்டும் நடக்காது என்பதில் என்ன நிச்சயம்? பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எந்த விதிகளையும் கொண்டிருக்காது.” என்று கூறியுள்ளார்.
இதில், “பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எந்த விதிகளையும் கொண்டிருக்காது.” என்று கூறியதுதான் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதேபோல் முன்னதாக ஒரு பேட்டியில் பேசிய அவர், “ இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதலை செய்துவிட்டு பாகிஸ்தான் சென்றால் கூட, அவர்களை அங்கேயே சென்று கொல்வோம். இந்தியா நில ஆக்கிரமிப்பையெல்லாம் விரும்புவதில்லை. அமைதியை மட்டுமே விரும்புகிறது. எங்கள் நிலத்தில் பயங்கரவாத செயல்களை செய்தால், அதை செய்யும் நபர்களை சும்மா விடமாட்டோம்.” என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.