நடுக்கடலில் இருந்த ஈரானிய கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தியதாக தகவல் வந்ததை அடுத்து இந்தியாவின் கடற்படை உடனே சென்று உதவியது. இதனையடுத்து 23 பாகிஸ்தான் மாலுமிகளைப் பத்திரமாக மீட்டது இந்திய கடற்படை.
ஏற்கனவே நடுக்கடலில் இருக்கும் கப்பல்களை கடற்கொள்ளையர்கள் கடத்தி செல்வது தொடர்க்கதையாகவே உள்ளது. அதுவும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் சண்டைக்கு ஆதரவு கொடுக்கும் நாடுகளின் கப்பல்கள் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்துகிறார்கள். ஏவுகணை தாக்குதல் எப்போது வேண்டுமென்றாலும் நடக்கிறது என்பதால் அரபிக்கடலில் இந்தியா இரண்டு போர்க்கப்பல்களை முன்னெச்சரிக்கையாக நிறுத்தி வைத்திருக்கிறது. அதன்படி நேற்று மாலை ஈரானிய கப்பலிலிருந்து ஐ.என்.எஸ் சுமேதா போர்க்கப்பலுக்கு உதவி கேட்டு ஒரு தகவல் வந்தது.
பின்னர்தான் அந்தக் கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தியது தெரியவந்தது. அதன்பேரில் ஐ.என்.எஸ் சுமேதா ஈரானிய கப்பலை நோக்கி விரைந்தது. அதற்குத் துணையாக ஏவுகணை தாங்கிய ஐ.என்.எஸ். திரிசுல் போர்க்கப்பலும் விரைந்தது. இந்த இரண்டு இந்திய போர்க்கப்பல்களும் ஏமன் அருகில் உள்ள சொகொத்ரா தீவிற்கு அருகில் நின்ற ஈரானிய கப்பலைத் தாக்க ஆரம்பித்தது. ஈரானிய கப்பலிலிருந்த கொள்ளையர்களும் திருப்பி துப்பாக்கி சூடு நடித்தினர். மாலை நேரத்தில் தொடங்கிய இந்தச் சண்டை சுமார் 12 மணி நேரமாக நடந்தது.
12 மணி நேரத்திற்கு பின்னர்தான் கடற்கொள்ளையர்கள் இந்திய கடற்படையிடம் சரணடைவதாகக் கூறினார்கள். அதன்படி ஈரானிய கப்பலில் இருந்த 23 பாகிஸ்தான் மாலுமிகளை இந்திய கடற்படையினர் பத்திரமாக மீட்டனர். அதன்பின்னர் 9 கடற்கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்தவுடன் இந்திய கடற்படையினர் கப்பலை முழுவதுமாக சோதித்தனர். சோதனையில் அது ஒரு மீன்பிடி படகுதான் என்பது தெரியவந்தது.
இதேபோல் இம்மாதத் தொடக்கத்தில் கடற்கொள்ளையர்களின் கப்பலை வழிமறித்து, இந்திய கடற்படையினர் தாக்கினார்கள். இந்தச் சண்டை 40 மணி நேரமாக நீடித்தது. அப்போது அதிலிருந்த அனைத்து கடற்கொள்ளையர்களையும் இந்திய கடற்படையினர் கைது செய்தனர்.