செய்திகள்

கலைஞர் கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு டிஜிட்டல் சாதனை ஆவணம் வெளியிட முடிவு!

கல்கி டெஸ்க்

மிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு, அவர் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல், முதலமைச்சராக பதவி வகித்த காலகட்டங்களில் உருவாக்கப்பட்ட கட்டடங்கள், அவற்றின் நோக்கம் மற்றும் பயன்பாடு ஆகியவை அடங்கிய டிஜிட்டல் ஆவணத் தொகுப்பு ஒன்றை வெளியிட முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று, 'நவீன தமிழகத்தின் சிற்பி - கலைஞர்' என்ற தலைப்பில் கூட்டம் ஒன்று அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அவர், “விவசாயம், மருத்துவம், உயர்க்கல்வி, தொழில் வளர்ச்சி, தகவல் தொழில்நுட்பம், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, வறுமை ஒழிப்பு, சாதி, மத வேறுபாடுகள் நீங்க இடஒதுக்கீடு, சமத்துவ சமுதாயம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி, விவசாய உற்பத்தியை பெருக்கியது என பல்வேறு துறைகளிலும் தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. நாட்டிலேயே பணக்கார மாநிலங்களான மகாராஷ்டிரா, மேற்கு வங்கத்தில்கூட உணவு உற்பத்தி இல்லாததால் பஞ்சம் ஏற்பட்டது. முன்னாள் முதல்வர் கருணாநிதி 'ஐஆர்-8' என்ற நெல் வகையை அறிமுகப்படுத்தி, ஏக்கருக்கு 45 மூட்டைகள் உற்பத்தி செய்யும் நிலையை உருவாக்கியதால் தமிழகத்தில் உணவுப் பஞ்சம் ஏற்படவில்லை.

குடிசைப் பகுதிகள் இல்லா தமிழகம் என்ற கொள்கையை வகுத்தார் கருணாநிதி. தமிழக கட்டட வடிவமைப்பில் நவீனங்களைப் புகுத்தினார். 1971ல் முதன்முதலாக சிப்காட் தொழில் வளாகங்களை உருவாக்கினார். 1997ல் கார் தொழிற்சாலைகளை நிறுவி, 'இந்தியாவின் டெட்ராய்ட் சென்னை’ எனப் புகழ்பெறச் செய்தவர் கருணாநிதி. தமிழகத்தில் முதன் முதலில் மேம்பாலங்கள் அமைத்து, நெடுஞ்சாலையை நவீனப்படுத்தினார். தகவல் தொழில்நுட்பக் கொள்கையை உருவாக்கி, தமிழக இளைஞர்கள் ஐ.டி. தொழிலில் ஆதிக்கம் செலுத்தும் நிலையை ஏற்படுத்தினார். இதனால் அனைத்தையும் நவீனமயமாக்கிய சிற்பி கருணாநிதி என்று உறுதியாகக் கூறலாம்” என்று பேசினார்.

இந்தக் கூட்டத்தில், கருணாநிதி பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த காலந்தொட்டு, முதலமைச்சராக பதவி வகித்த காலங்களில் கட்டப்பட்ட முக்கியமான கட்டடங்கள், கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றின் நோக்கம் மற்றும் பயன்பாடுகள் உள்ளிட்ட விவரங்களைத் தொகுத்து டிஜிட்டல் ஆவணம் ஒன்றை உருவாக்க வேண்டும். அவரது காலத்தில் கட்டப்பட்ட 100 கட்டடங்களின் புனரமைப்பு மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கான கால அளவு, நிதியை நிர்ணயிக்க வேண்டும். மேலும், கருணாநிதி காலத்து கட்டடப் பணிகள் குறித்து சாதனைக் கூட்டங்கள், விழாக்கள் நடத்துவதுடன், குறும்படங்கள் வெளியிட வேண்டும். முக்கியமானக் கட்டடங்களில் மின் ஒளி விளக்கு அலங்காரம் செய்ய வேண்டும் என்பவை உள்ளிட்ட முடிவுகள் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டன.

இதய மாற்று அறுவை சிகிச்சையில் ஒரு புதிய மைல்கல்!

பெண்களுக்கு கைமேல் பலன் தரும் கன்னிகா பரமேஸ்வரி வழிபாடு!

ஹரியானாவில் தீப்பிடித்து எரிந்த சுற்றுலா பேருந்து… 8 பேர் பலி!

தொலைதூரப் பயணங்கள் முடிவதில்லை… தொடரும்…!

பிக்மேலியன் விளைவால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT