செல்லப் பிராணிகளிடம் அவற்றை வளர்ப்பவர்களின் இதயத்தில் தனி இடம் உண்டு. அந்த வகையில் செல்லப் பிராணியான நாய்க்கு ஒரு குடும்பத்தினர் அதிக பணம் செலவழித்து சொகுசாக திருமணம் செய்துவைத்துள்ளார்.
இரண்டு நாய்களின் உரிமையாளர்களும் பெரும் பணச்செலவில் நாய்களுக்கு விமரிசையாக திருமணம் செய்து வைத்த நிகழ்வு சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது மட்டுமல்லாது, இணையதள ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஹதிந்தர் சிங் என்பவர் இந்த விடியோவை டுவிட்டரில் பதிவிட்டு பகிர்ந்துள்ளார். நாய்களின் திருமணத்துக்கு வந்த விருந்தினர்களும் நிகழ்வை மகிழ்ச்சியுடன் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடியுள்ளனர்.
செல்ல நாய்கள் திருமணத்துக்கான ஏராளமாக பணம் செலவிடப்பட்டுள்ளது. இந்தியர்களின் திருமணம் போலவே அலங்காரங்களுடனும், ஆடம்பரத்துடனும் நாய்கள் திருமணம் நடைபெற்றுள்ளது. மாப்பிள்ளை நாய், புதிய உடையுடன், தலையில் “டர்பன்” (தலைப்பாகை) அணிந்து எலெக்ட்ரிக் பொம்மை காரில் வந்து இறங்கியது. காரின் முகப்பில் இதயம் போன்ற சின்னம் வரையப்பட்டு அதில் “ரியோ அண்ட் ரியா” என்று எழுதப்பட்டிருந்த்து. அவை அந்த நாய்களின் பெயராக இருக்கலாம். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில் மணமகளான பெண் நாய் சிவப்பு கலரில் துப்பட்டா அணிந்து வந்ததுதான்.
பின்னர் மணமகள், திருமண நிகழ்வு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது. பின்னர் இரண்டு நாய்களும் ஒன்றாக நிற்கவைக்கப்பட்டு அவற்றுக்கு மாலை அணிவித்து பொட்டு வைக்கப்பட்டது. அதன் பின் விமரிசையாக திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும் மணமகளான செல்ல நாய், மாப்பிள்ளை வீட்டுக்கு டோலியில் அனுப்பிவைக்கப்பட்டது.
இந்த விடியோவை 18,000-த்துக்கும் மேலானவர்கள் பார்வையிட்டுள்ளனர். “இந்திய முறையில் நாய்களுக்கு திருமணம்” என்று அந்த விடியோவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
“எதையும் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டாம். நாய்களுக்கு இந்திய முறையில் சூப்பராக திருமணம் நடந்துள்ளது. நானும் செல்லப்பிராணியை வளர்ப்பதால் நாய்களிடம் அதன் உரிமையாளர்கள் வைத்துள்ள அன்பை புரிந்து கொள்ள முடிகிறது” என்று ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார்.
“கையில் நாலு காசு இருந்தால் எதையும் செய்யலாம்” என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.
“நான் செல்லப்பிராணியாக பூனை வளர்த்து வருகிறேன். எனக்கும் இது போல் பூனைக்கு திருமணம் செய்துவைக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அது நடக்குமா என்று தெரியவில்லை” என்று மூன்றாவது நபர் கருத்து பதிவிட்டுள்ளார்.
“பெரும் செலவில் விமரிசையாக நாய்களுக்கு திருமணம் நடப்பதை பார்ப்பதற்கே ரம்மியமாக இருந்தது” என்று ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.