M. K. Stalin inaugurated the new buildings of Madurai Government Rajaji Hospital 
செய்திகள்

மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையின் புதிய கட்டடங்களை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்!

கல்கி டெஸ்க்

ருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் 313 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 6 தளங்கள் கொண்ட புதிய டவர் பிளாக் கட்டடம் மற்றும் நவீன மருத்துவ உபகரணங்கள், 29 கோடி ரூபாய் செலவில் அரசு இராஜாஜி மருத்துவமனை, தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனை, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி, உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, சமயநல்லூர், சுகாதாரம் மற்றும் குடும்பநல பயிற்சி மையம் மற்றும் துணை செவிலியர் பயிற்சிப் பள்ளி ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள மருத்துவத் துறை கட்டடங்களை காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 27.2.2024 அன்று தலைமைச் செயலகத்தில் இருந்தபடி திறந்து வைத்தார்.

மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் நவீன மருத்துவ உபகரணங்களுடன் கூடிய 6 தளங்கள் கொண்ட புதிய டவர் பிளாக் கட்டடம், மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில், 19,472.09 சதுர மீட்டர் பரப்பளவில் 313 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் ஆறு தளங்களுடன், நவீன மருத்துவ உபகரணங்களுடன் கூடிய நவீன அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் இருதய சிகிச்சை, இருதய அறுவை சிகிச்சைக்கான சிறப்பு பிரிவுகள் கொண்ட புதிய கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு தரை மற்றும் மூன்று தளங்களுடன் 8 கோடியே 1 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தையும் முதல்வர் திறந்து வைத்தார்.

மேலும், அரசு இராஜாஜி மருத்துவமனையில் நெஞ்சக நுரையீரல் பிரிவுக் கட்டடம் கோவிட்-19 பெருந்தொற்று நோய்க்குப் பிறகு சுவாச நோய்களுக்கான சிகிச்சையின் தேவை அதிகரித்து வருவதுடன், நெஞ்சக நோய்க்கான சுவாச மருத்துவ புறநோயாளர்கள் பிரிவை நாடும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சில நோயாளிகள் கடுமையான மூச்சுத் திணறலுக்காக நுரையீரல் மருத்துவப் பிரிவை நாடி வருவதுடன், நுரையீரல் கட்டி அல்லது புற்றுநோயைக் கண்டறிவதற்கான தேவையும் அதிகரித்து வருவதால் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் 2 கோடியே 89 இலட்சம் ரூபாய் செலவில் புதிய நெஞ்சக நுரையீரல் பிரிவுக் கட்டடம் கட்டப்பட்டு தமிழக முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.

இவை தவிர மதுரை மாவட்டம், சமயநல்லூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் உள்ள சுகாதாரம் மற்றும் குடும்பநல பயிற்சி மையக் கட்டடத்தில் செயல்பட்டு வரும் துணை செவிலியர் பயிற்சிப் பள்ளியில் 1 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள விடுதிக் கட்டடத்தையும் முதல்வர் திறந்து வைத்தார். மேலும், மதுரை மாவட்டம் சமயநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் உள்ள சுகாதாரம் மற்றும் குடும்பநல பயிற்சி மையத்தில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கூடுதலாக கட்டப்பட்டுள்ள இரண்டாம் தளத்தில் பயிற்சிக்கான அறைகள் மற்றும் கூட்ட அரங்கத்தையும் முதல்வர் திறந்து வைத்தார்.

அதோடு மதுரை மாவட்டம், தோப்பூரில் உள்ள அரசு காசநோய் மருத்துவமனையில் தொற்றுநோய் (கோவிட், பன்றி காய்ச்சல், பறவை காய்ச்சல்), நுரையீரல் சிகிச்சை பிரிவிற்கு 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனையையும் தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.

மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவ சிகிச்சைக்காக நாள் ஒன்றுக்கு சுமார் 70 முதல் 100 கர்ப்பிணிப் பெண்கள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனர். கர்ப்பிணிகளோடு உடன் இருப்போர் மற்றும் அவசர சிகிச்சைக்காக வரும் பெண்கள் தங்குவதற்காக மகப்பேறு பிரிவின் வளாகத்தின் உள்ளேயே, கழிப்பறை மற்றும் குளியலறை வசதிகளுடன் சுமார் 100 நபர்கள் அமரும் இடவசதியுடன், இரண்டு தளங்களுடன் 65 லட்சும் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காத்திருப்போர் அறையையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இவை மட்டுமின்றி, மதுரை மருத்துவ கல்லூரியில் தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மாணவர்களுக்கான அறுவை சிகிச்சை மற்றும் லேப்ரோஸ்கோபி சிகிச்சைக்கான, எண்டோஸ்கோபி பயிற்சிக்காக 1 கோடியே 74 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அறுவை அரங்குடன் கூடிய மேம்படுத்தப்பட்ட விலங்குகள் ஆராய்ச்சி கூடத்தையும் முதல்வர் திறந்து வைத்தார். மதுரை மருத்துவக் கல்லூரியில் தரை மற்றும் முதல் தளத்துடன் கல்வி மற்றும் கலாசார நடவடிக்கைக்காக 900 மாணவர்கள் பங்கு பெறும்வண்ணம் 2 கோடியே 46 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட கலையரங்கத்தையும் முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப., தேசிய நல வாழ்வு குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் இ.ஆ.ப., தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் எம்.கோவிந்த ராவ், இ.ஆ.ப., மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் மரு. இளங்கோ மகேஸ்வரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மதுரையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி, எம்.பூமிநாதன், ஏ.வெங்கடேசன், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மரு. சங்குமணி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT