தெலங்கானா மாநில ஆளுநராக கௌரவமான பொறுப்பில் இருந்த தமிழிசை, அதை ராஜினாமா செய்துவிட்டு கட்சி அரசியல் பணியில் பங்கேற்கப்போவதாகச் சொல்லி தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளராக தேர்தலைச் சந்தித்தார். கடந்த மக்களைவை தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழியிடம், ‘வெற்றிகரமான தோல்வி’யை சந்தித்த தமிழிசை, இம்முறை தென்சென்னை தொகுதியில் தமிழச்சி தங்கப்பாண்டியனை சமூக வாக்குகளைப் பெற்று எளிதாக வெற்றி பெற்று விடலாம் என எண்ணி தேர்தல் களத்தில் இறங்கினார்.
அதோடு, கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இரண்டாம் இடத்தை பெற்ற திமுகவுக்கும் மூன்றாம் இடத்தைப் பிடித்த பாஜகவுக்கும் வாக்கு வித்தியாசம் சுமார் 40 ஆயிரம்தான். தமிழிசை இந்தத் தொகுதியில் நின்று தேர்தலை சந்திக்க இதுவும் ஒரு காரணமாகும்.
அவர் நினைத்தது போலவே, தென்சென்னை தொகுதியின் சில பகுதிகளில் தமிழச்சிக்கு கிடைத்த சிறு சிறு எதிர்ப்புகளை வைத்து எளிதாக அவரை வென்று விடலாம் என்று கணக்குப் போட்டு விட்டார் தமிழிசை. கடந்த தேர்தலில் பாஜக, அதிமுகவோடு கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தபோதே தமிழச்சி அந்தத் தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார். இம்முறை அந்தக் கூட்டணியும் இல்லாமல் போனது. அதோடு, மக்கள் நீதி மய்யமும் திமுக கூட்டணியில் சேர்ந்து இருந்ததனால் தமிழச்சியின் வெற்றி இன்னும் எளிதாகிப் போனது.
இந்தத் தொகுதியில் தமிழிசையால் வெற்றி பெற முடியாவிட்டாலும், அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனை ஓரங்கட்டி, மூன்றாம் இடத்துக்குத் தள்ளிவிட்டு அவர் இரண்டாம் இடத்தைப் பெற்று இருக்கிறார். அந்த வகையில் இது அவருக்கு, ‘வெற்றிகரமான தோல்வி’ என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
அதிரடியான அரசியலை கையிலெடுக்காமல் மென்மையான நாகரிக அரசியலை மேற்கொள்பவர் தமிழிசை. ‘குமரியார் மகள் அரசியல் நாகரிகத்துடன் இருப்பார். மக்கள் விரோத கட்சியில் அவர் அங்கம் வகித்தாலும் அவரது அடிப்படை குணம் ஒருபோதும் மாறாது’ என்று மறைந்த முன்னாள் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியால் பாராட்டுப் பெற்றவர். அதற்கேற்பவே இன்று வாக்குப்பதிவு எண்ணிக்கை முடிவடைந்து முடிவு தெரிந்த பின்பும் அதை பெருந்தன்மையோடு சிரித்த முகத்துடன் ஏற்றுக்கொண்டவர் தமிழிசை.