கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா https://tamil.abplive.com
செய்திகள்

‘கூட்டாட்சி தத்துவத்துக்கு பாடுபட்டவர் கருணாநிதி’ நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டு அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்!

கல்கி டெஸ்க்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா தற்போது நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று (18.08.2024) சென்னை, கலைவாணர் அரங்கில் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். 100 ரூபாய் முக மதிப்பு கொண்ட அந்த நாணயத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார். அந்த நாணத்தில், ‘தமிழ் வெல்லும்‘ என்ற வாசகம் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம்

கருணாநிதியின் நினைவு நாணயத்தை வெளியிட்டு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசும்போது, “துணிச்சல் மிக்க தலைவர்களில் ஒருவர் கருணாநிதி. அவர் தலைசிறந்த நிர்வாகியுமாக விளங்கினார். தமிழக அரசியலில் 1960ம் ஆண்டு தொடங்கி, தற்போது வரை மிகப்பெரும் ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக திமுகவை வளர்த்தவர். கடைநிலை மக்களுக்கும் தரமான வாழ்க்கையை கொடுத்தவர் கருணாநிதி. 1989ம் ஆண்டிலேயே மகளிருக்கான சுய உதவிக் குழுக்களைக் கொண்டு வந்து பெண்களின் நலனுக்காகப் பாடுபட்டவர். இதன் மூலம் பாலின சமத்துவத்தை அவர் பேணினார்.

மாநில நலனுக்காக மட்டுமின்றி, மத்தியில் அவர் பல்வேறு தேசியக் கட்சிகளுடனும் நல்லுறவைப் பேணியவர். தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் அரசியல் வரைபடத்தை உருவாக்குவதில் கருணாநிதிக்கு முக்கியப் பங்கு உண்டு. கூட்டாட்சி தத்துவத்துக்குக் குரல் கொடுத்த  கருணாநிதி நாட்டின் நலனுக்காகவும் தேவைப்படும் சமயங்களில் குரல் கொடுக்கத் தவறாதவர்” என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் கருணாநிதி குறித்து பெருமைபட பேசினார்.

முன்னதாக, கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கட்சி பாகுபாடின்றி அனைத்துக் கட்சியினருடனும் நட்பு பாராட்டும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணத்தை வெளியிட மிகவும் பொருத்தமானவர். கருணாநிதி நூற்றாண்டு விழாவை இந்தியாவே கொண்டாடுகிறது. இந்திய சுதந்திர தினத்தன்று மாநில முதல்வர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. தேவைப்படும் சமயங்களில் மாநில உரிமைகளுக்காகப் போராடிய கருணாநிதி நெருக்கடி ஏற்படும் சமயங்களில் நாட்டுக்குக் கைகொடுத்தவர். தற்போது தமிழகத்தில் நடைபெறுவது ஒரு கட்சி சார்ந்த அரசு அல்ல. இங்கு ஓர் இனத்தின் அரசு நடைபெறுகிறது. கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட மிகப்பெரும் ஒத்துழைப்புக் கொடுத்தமைக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி” என்று பேசினார்.

இந்த விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் மத்திய, மாநில அதிகாரிகளும் மாநில அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் முன்னிலை வகித்து வரவேற்புரை நிகழ்த்தினார்

முன்னதாக, கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள வந்திருந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்துக்குச் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், அங்குள்ள கருணாநிதி அருங்காட்சியகத்தையும் பார்வைட்டார்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT