ஊழலுக்கு எதிராக 2014ம் ஆண்டில் இயக்கம் ஆரம்பித்து, டெல்லியை கிடுகிடுக்க வைத்து, கைதாகி சிறை சென்று அகில இந்திய அளவில் மக்களின் கவனத்தை ஈர்த்தவர் முன்னாள் ராணுவ வீரரும், சமூகப் போராளியுமான அண்ணா ஹசாரே. 88 வயதாகும் இவர், மகாராஷ்டிர மாநிலத்தின் அகமத்நகர் மாவட்டத்தில் உள்ள ராலேகான் சித்தி என்ற தனது சொந்த கிராமத்தில் வசித்து வருகிறார். ராகுல் காந்தியின் யாத்திரைகள், பாராளுமன்றத் தேர்தல், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது என்று கடந்த சில மாதங்களில் நாடு பல பரபரப்புகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையிலும் அமைதி காத்து வந்த அண்ணா ஹசாரே, அண்மையில் வாய் திறந்திருக்கிறார்.
“நான் என்னுடைய வாழ்க்கையை பொதுப்பணிக்கு அர்ப்பணிக்க முடிவு செய்தபோது, என்னுடைய சொந்த கிராமத்தில் இருந்து துவங்க விரும்பினேன். அப்போது ராலேகான் சித்தி கிராமம் வறுமையில் சிக்கித் தவித்தது. தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடியது. மழை நீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தினேன். சில ஆண்டுகளில் அதற்கு நல்ல பலன் கிடைத்தது. குடிநீர் பிரச்னை தீர்ந்து, விவசாயத்துக்கும் தண்ணீர் கிடைத்தது. விவசாயமும் கால்நடை வளர்ப்பும் மக்களின் வருவாயை அதிகரித்தன. கிராமத்தில் வளர்ச்சியைக் கண்கூடாகக் காண முடிந்தது.
‘முதலில் உன் கிராமத்தை முன்னேற்று. அதன் பிறகு தேச முன்னேற்றத்தில் கவனம் செலுத்து’ என்பதற்கேற்ப, கிராமத்தில் மேம்பாடு ஏற்பட்ட பிறகு, லஞ்ச ஊழலுக்கு எதிரான எனது போராட்டம் துவங்கியது. எனது போராட்டத்தால், மக்கள் மத்தியில் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்ச்சி ஏற்பட்டது. மகாராஷ்டிராவில் தகவல் பெறும் உரிமைக்கான எனது போராட்டத்தின் பயனாக தகவல் உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. சிறு அளவில் துவங்கிய தேசிய அளவிலான இந்தப் போராட்டத்தின் பலன்தான் லோக்பால், லோக் ஆயுக்தா சட்டம்” என்று கூறுகிறார்.
“கெஜ்ரிவாலுடன் நெருங்கிப் பழகத் துவங்கியதில் இருந்தே அவருக்கு அதிகாரத்தின் மீதும், பதவியின் மீதும்தான் ஈர்ப்பு உள்ளது; தேச முன்னேற்றம் அவரது லட்சியம் இல்லை என்பது எனக்குப் புரிந்தது. என் பக்கத்தில் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அமர்ந்திருந்தவர், இப்போது ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கிறார். மது விலக்கு விஷயத்தில் என்னுடன் சேர்ந்து போராடியவர், இன்று மது பானக் கொள்கை விவகாரத்தில் கைதாகி இருக்கிறார். வினை விதைத்தவன் வினை அறுப்பான்! வேறு என்ன சொல்ல?” என்று வருத்தம் தோய்ந்த குரலில் சொல்கிறார். அதேசமயம் பள்ளிக் கல்வி தொடர்பாக கெஜ்ரிவால் அரசின் செயல்பாடுகளை ஹசாரே பாராட்டத் தவறவில்லை.
நரேந்திர மோடி நல்ல காரியங்கள் சில செய்திருக்கிறார். அதேசமயம் அவருக்கும் அதிகார ஆசை இருக்கிறது” என்று மோடி குறித்தும் அண்ணா ஹசாரே கூறுகிறார்.