Modi with Ayothya Ramar 
செய்திகள்

மோடியை கைவிட்ட அயோத்தி ராமர்!

கல்கி டெஸ்க்

த்தரபிரதேச மாநிலம், அயோத்தியை உள்ளடக்கியது பைஸாபாத் மக்களவைத் தொகுதி. நடைபெற்று முடிந்த தேர்தலில் இந்தத் தொகுதியில் பாஜக சார்பில்  லல்லுசிங்கும் சமாஜ்வாதி கட்சியின் சார்பில் அவ்தேஷ் பிரசாத் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் சுமார் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவை சேர்ந்த லல்லுசிங் தோல்வி அடைந்து அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளார்.

பாஜக தனது ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் அயோத்தியில் ராமர் கோயிலை கட்டுவதில் உறுதியை அளித்து வந்தது. இதனால், அயோத்தி ராமர் கோயில் பிரச்னையில் பாஜக அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக பலராலும் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, இதன் மேல்முறையீட்டு தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் 9, 2019ல் ராமர் கோயிலைக் கட்ட அனுமதிஅளித்து. இதற்கான பூமி பூஜையை பிரதமர் மோடி முன்னின்று நடத்தினார். கடந்த ஜனவரி மாதம் ராமர் கோயில் கட்டப்பட்டு பிரதமர் நரேந்திரமோடியால் திறந்து வைக்கப்பட்டது. இதனால், உ.பி.யில் பாஜகவிற்கு அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி உறுதி என்றே அனைவராலும் கருதப்பட்டது.

ஆனால், ராமர் கோயில் அமைந்த அயோத்யாவின் பைஸாபாத் தொகுதியில் பாஜக வேட்பாளர் லல்லுசிங் பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த அவ்தேஷ் பிரசாத்திற்கு கிடைத்த வெற்றி இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்து இருக்கிறது. கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மட்டுமே காங்கிரஸ் அங்கு வெற்றி பெற்று இருந்தது. அதன் பிறகு 2014 முதல் இந்தத் தேர்தல் வரை அந்தத் தொகுதி பாஜக வசமே இருந்தது. அதிலும் குறிப்பாக 2014 முதல் இந்தத் தொகுதியின் எம்பியாக லல்லுசிங்கே இருந்தார். அது மட்டுமின்றி, இவர் அயோத்தி சட்டமன்ற உறுப்பினராக 5 முறை இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜகவின் மத்திய, மாநில அரசுகளின் சார்பாக பைஸாபாத் தொகுதிக்கு 50,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை அறிவித்து இருந்தன. அவற்றில் சில திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டும் வருவது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், பாஜகவை தோல்வியுறச் செய்தும், சமாஜ்வாதி வேட்பாளரை வெற்றி பெறச் செய்தும் பைஸாபாத் மக்களவைத் தொகுதி மக்கள், அயோத்தி ராமர் கோயிலை அரசியலில் இருந்து தனித்து வைத்து விட்டது உற்று நோக்கத்தக்கது. மூச்சுக்கு முன்னூறு முறை அயோத்தி ராமர் அயோத்தி ராமர் என்று கூறிக் கொண்டிருந்த பாஜகவை ராமரே கைவிட்டுவிட்டார் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT