செய்திகள்

நகரும் இந்தியக் கண்டம்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

கல்கி டெஸ்க்

துருக்கி, சிரியா நாடுகளில் அண்மையில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கம் உலகையே பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை பல்லாயிரத்தைத் தாண்டியது. இன்னும்கூட அவ்வப்போது அந்த நாடுகளில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டுக்கொண்டுதான் உள்ளது. இதனால் அந்த இரு நாடுகளின் துயரம் இன்னும் தீராததாகவே உள்ளது. துருக்கி, சிரியா நாடுகளைத் தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகளிலும் கூட அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்தியாவில் கடந்த 2005ம் ஆண்டு காஷ்மீரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சுமார் 80,000 பேர் உயிரிழந்தனர். அதற்கு முன்பு 2001ம் ஆண்டு குஜராத் மாநில கட்ச் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 20,000 பேர் இறந்தனர். இந்த நிலையில் தற்போது இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் நில நடுக்கம் பதிவாகி இருந்தது. அதைத் தொடர்ந்து நிலநடுக்க சாத்தியக்கூறுகள் தொடர்பான ஆய்வுகள் செய்யப்பட்டு, அதன் முடிவு அறிக்கைகளும் வெளியாகி வருகின்றன.

அதன்படி தேசிய புவி இயற்பியல் ஆய்வுக் கழகத்தின் தலைமை விஞ்ஞானி என்.பூர்ண சந்திர ராவ் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘நில நடுக்கங்கள் ஏற்படக் காரணம் கண்டத் தட்டுகள் நகருவதால்தான். இந்திய கண்டத் தட்டு அல்லது டெக்டோனிக் பிளேட் என்பது ஆண்டுக்கு 5 செ.மீ. நகர்ந்து கொண்டே இருக்கிறது. இது இந்தியாவில் மிகப் பெரிய நிலநடுக்கத்துக்கான சாத்தியங்களை அதிகப்படுத்தி இருக்கிறது. மேலும், இமயமலையில் நேபாளத்தின் வடக்கு மற்றும் இந்தியாவின் இமாச்சல பிரதேச மாநிலம் இடையே பெரும் இடைவெளி உருவாகிக் கொண்டிருக்கிறது. இது உத்தரகாண்ட்டில் மிக மோசமான நிலநடுக்க பாதிப்பை எந்த நேரத்திலும் ஏற்படுத்தலாம்’ என விஞ்ஞானி என்.பூர்ண சந்திர ராவ் எச்சரிக்கை செய்துள்ளார்.

‘துருக்கி நாட்டில் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது’ என டச்சு ஆய்வாளர் ஹூக்ர்பீட்ஸ் முன்னரே கணித்துக் கூறினார். அவரும் தற்போது இந்தியாவில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக எச்சரித்திருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.

தாயாருக்காக ஆதிசங்கரர் கட்டிய திருக்கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ஊருக்குப் போகப் போகிறீர்களா? இதைப் படிச்சிட்டு நிம்மதியாப் போங்க!

பாதாமி குகைகளின் ஆச்சரியத் தகவல்கள் தெரியுமா?

விருந்தோம்பலின் மறுபக்கம் மாறிவரும் கலாச்சாரம்!

ஒயிட் ஆனியனில் இருக்கும் ஒப்பற்ற நன்மைகள்!

SCROLL FOR NEXT