செய்திகள்

ம.பி.தேர்தல்: இலவசங்கள் & மோடி செல்வாக்கை நம்பியிருக்கும் பா.ஜ.க.

ஜெ.ராகவன்

த்தியப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ஆளும் பா.ஜ.க. எதிர்ப்பு அலைகளை சமாளிக்க பல்வேறு உத்திகளை வகுத்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் தலைமையிலான ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆளும் பா.ஜ.கவுக்குள் உட்பூசல் நாளுக்குநாள் அதிகரித்து வந்துள்ளது.

இந்த நிலையில் தேர்தலை சமாளிக்கும் பணியை மத்திய தலைமை கையிலெடுத்துக் கொண்டுள்ளது. மத்திய தலைவர்கள் இடும் கட்டளையை பின்பற்றிச் செயல்படுமாறு மாநிலத் தலைவர்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிப்பது பிரதமர் மோடியின் கையில்தான் உள்ளது என்று முதல்வர் சிவராஜ் சிங் செஹான் சென்ற மாதமே சூசகமாக கூறியிருந்தார்.

அதாவது ம.பி.யில் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நாம் தேர்தலில் வெற்றிபெற நமக்கு பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார். காங்கிரஸ் கட்சிக்கு யார் இருக்கிறார்கள் என்று பேசியிருந்தார்.

தேர்தல் உத்தியை பா.ஜ.க. இன்னும் வெளியிடவில்லை என்றாலும் முதல்வர் செஹான் தலைமையிலான அரசு, வாக்காளர்களை கவர பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது.

இதுவரை வளர்ச்சிப் பணிகளை முன்வைத்து பேசிவந்த அரசு திடீரென மகளிர்க்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் அறிவித்து, முதல்கட்டமாக 1.25 கோடி பயனாளர் களுக்கான நிதியை ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனிடையே பா.ஜ.க. ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்த மாதம் சப்தரிஷி சிலைகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தை காங்கிரஸ் முன்னிலைப்படுத்தி வருகிறது. இது தொடர்பாக லோக் ஆயுக்தா விசாரணை நடத்தி வருகிறது. ஆனாலும் இந்த குற்றச்சாட்டுகள் பா.ஜ.க.வுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் முந்தைய கமல்நாத் தலைமையிலான 15 மாத கால காங்கிரஸ் ஆட்சியை சிவராஜ் சிங் செளஹான் குறைகூறி விமர்சித்தார். ஆனால், அது எடுபடவில்லை. இதையடுத்து 1993 முதல் 2003 வரை இருந்த திக்விஜய்சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின் ஊழல்களை தோண்டியெடுத்து பிரசாரம் செய்ய பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

ஹிந்துத்துவா அரசியல், இலவசங்கள் அறிவிப்பு மற்றும் பிரதமர் மோடியின் செல்வாக்கு இவற்றை முன்வைத்து எதிர்ப்பு அலைகளை சமாளித்து வெற்றிபெற்றுவிடலாம் என பா.ஜ.க. திட்டமிட்டு வருவதாகத் தெரியவந்துள்ளது.

அண்மையில் ஜபல்பூரில் பிரசாரத்தை தொடங்கிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி, ரூ.500 விலையில் எரிவாயு சிலிண்டர் மற்றும் மின்கட்டண சலுகை உள்ளிட்டவற்றை அமல்படுத்தப்படும் என்று அறிவித்திருந்த்து  குறிப்பிடத்தக்கது.

கடந்த 2018 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்தது. எனினும் 2020 இல் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தலைமையில் 22 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸுக்கு எதிராக போர்க்கொடி பா.ஜ.க.வில் சேர்ந்ததை அடுத்து அங்கு அதிக பலத்துடன் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தது.

குளிர் காலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான மொறு மொறு பக்கோடா வகைகள்!

சின்ன விஷயங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் அவசியம் தெரியுமா?

ஸ்ரீ சத்யசாயி பாபாவின் பொன்மொழிகள்!

நேர்மறை உணர்வோடு (Positive feeling) பயணியுங்கள்..!

வெண்ணெய் (Butter jeans) ஜீன்ஸின் தனித்துவம் தெரியுமா?

SCROLL FOR NEXT