நேபாளத்தை டெல்லியிலிருந்தபடி இயக்குவதாக ஏறக்குறைய 50 ஆண்டுகளாக பேசப்படுவதுண்டு. இந்தியாவின் தலையீட்டை நேபாளம் விரும்புவதில்லை என்பது அங்குள்ள எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு. சமீபத்தில் நேபாள பிரதமரின் பேச்சு எரியும் கொள்ளியில் எண்ணெய் விட்டதுபோல் நேபாள அரசியலை பரபரப்பாக்கியிருக்கிறது.
இந்தியாவைச் சேர்ந்த நேபாள தொழிலதிபர் சர்தார் பிரிதம் சிங் குறித்து எழுதப்பட்ட ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு நேபாள பிரதமர் புஷ்ப கமல் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பிரதமரின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அப்படியென்னதான் பேசிவிட்டார்?
தொழிலதிபர் சர்தார் பிரிதம் சிங் என்னை நேபாளத்தின் பிரதமர் ஆக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். இதற்காக அவர் பலமுறை டெல்லிக்கு பயணம் செய்து வந்ததோடு, காத்மண்டுவிலும் எனக்காக பல்வேறு அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
இந்தியா-நேபாளம் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்காக பங்களிப்புகளை செய்தவரை கௌரவப்படுத்துவதற்காக நேபாள பிரதமர் பேசிய பேச்சுதான் எதிர்க்கட்சிகளை கோபப்படுத்தியிருக்கிறது. ஒரு நாட்டின் பிரதமராவதராக வருவதற்கு பல்வேறு லாபிகளை செய்யவேண்டியிருப்பது உண்மைதான். இந்தியாவின் அண்டை நாடுகளில் நடைபெறும் ஆட்சி மாற்றங்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இந்தியாவில் பங்கு இருந்து வந்திருக்கிறது.
நேபாள பிரதமர் வெளிப்படையாக டெல்லியின் பங்கு இருந்ததாக குறிப்பிட்டதுதான் பல்வேறு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. பிரதான எதிரகட்சியான நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கே.பி.சர்மா ஒலி, இது குறித்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து தன்னுடைய கண்டனத்தை வெளிப்படுத்தினார்.
பிரதமரின் பேச்சு, நேபாளத்தின் சுதந்திரம், கண்ணியம், அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நாடாளுமன்ற நடைமுறைகளை அவமதிக்கும் வகையில் அமைந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்து பிரதமர் எத்தனை விளக்கங்கள் கொடுத்தாலும் அது எங்களுக்கு தேவையில்லை. உடனடியாக பிரதமர் பதவியிலிருந்து அவர் விலகிக்கொள்வதுதான் நல்லது என்று தெரிவித்துள்ளார்.
தன்னுடைய பேச்சு, தவறான முறையில் உள்நோக்கத்துடன் திரிக்கப்படுவதாக நேபாள பிரதமரும் விளக்கமளித்திருக்கிறார். இது குறித்து இந்திய அரசியல் வட்டாரங்களில் இதுவரை பேசுபொருளாகவில்லை. நாளை எதிர்க்கட்சிகள் கையிலெடுத்தாலும் டெல்லி வட்டாரங்கள் இது குறித்து விளக்கம் அளிக்கப்போவதில்லை என்கிறார்கள்