A new architectural model for neuroscience 
செய்திகள்

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் நரம்பியல் துறைக்கு புதிய கட்டடம்!

கல்கி டெஸ்க்

சென்னை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய அரசு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. மிகப் பழைமையான இந்த மருத்துவமனையில் அனைத்து வகை நோய்களுக்கும் மருத்துவ சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்பட்டு வருகின்றன.

சுமார் 2,500 படுக்கை வசதிகளுடன்கூடிய இந்த அரசு மருத்துவமனையில் 10,000 முதல் 15,000 பேர் புறநோயாளிகளாக தினசரி வருகை தந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். மருத்துவத் துறையில் இந்தியாவிலேயே தலைசிறந்து விளங்கும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் அமையப்பெற்றுள்ள இந்த மருத்துவமனையில் அனைத்து மருத்துவத் துறைகளும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.

இம்மருத்துவமனைக்கு மேலும் பெருமை சேர்க்கின்ற வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சென்னை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் நரம்பியல் துறைக்கென அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் என்று மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை விரைந்து செயல்படுத்திடும் பொருட்டு, 65 கோடி ரூபாய் அனுமதித்து தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டு இருக்கிறார்.

தமிழ்நாட்டில் பொதுப்பணித்துறையின் மூலம் கடந்த மூன்றாண்டுகளில் 4,821.55 கோடி செலவில் 941 மருத்துவத் துறைச் சார்ந்த புதிய கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், பொதுப்பணித் துறையின் சார்பில் நரம்பியல் துறைக்கென்று புதிதாக உருவாக்கப்படும் இந்தக் கட்டடம் சுமார் 1 லட்சத்து 12 ஆயிரம் சதுர அடியில் (10,428 ச.மீ.) நான்கு தளங்களுடன் 220 படுக்கை வசதிகளோடு உலகத் தரத்தில் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.

இந்தக் கட்டடத்தின் தரைத்தளத்தில் நரம்பியல் மருத்துவ புறநோயாளிகள் பிரிவு, நரம்பியல் அறுவை சிகிச்சை புறநோயாளிகள் பிரிவு, கதிரியக்கவியல் பிரிவு, இயன் மருத்துவப் பிரிவு போன்ற வசதிகள் அமைய உள்ளது.

முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான பொது வார்டுகள், மூன்றாம் தளத்தில் தீவிர சிகிச்சை பிரிவுகள் போன்ற வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. நான்காம் தளத்தில் நவீன வசதிகள் கொண்ட 6 அறுவை சிகிச்சை அரங்குகள், அறுவை சிகிச்சைக்கு முந்தைய அறை மற்றும் மீட்பு அறை போன்ற வசதிகள் இடம்பெற உள்ளன.

தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை மூலம் கட்டப்படும் இக்கட்டடத்தின் அனைத்துத் தளங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பிடம், பொது கழிப்பிடம், 4 மின்தூக்கிகள், 2 படிக்கட்டுகள், சாய்வுதளம், மருத்துவ திரவ ஆக்ஸிஜன் இணைப்புகள், தீயணைப்பு உபகரணங்கள் போன்ற பிற வசதிகளுடன் இந்தக் கட்டடம் கட்டப்பட்டு பொதுமக்களுக்கு நரம்பியல் துறை மருத்துவ சேவைகளை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

SCROLL FOR NEXT