அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டு மொபைல் போன் உற்பத்தி தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் ஆப்பிள் நிறுவனம், அதன் சில்லறை விற்பனையை மேலும் அதிகப்படுத்தும் நோக்கத்தோடு, இந்தியாவில் நான்கு நகரங்களில் மேலும் ஷோரூம்களை திறக்க இருப்பதாக அந்நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் ஓ பிரைன் தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, வரும் 2030ம் ஆண்டுக்குள் ஜீரோ கார்பன் உமிழ்வு இலக்கை அடைய இந்திய ரயில்வே இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக, ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்கான முதல் ரயிலின் சோதனை இந்தாண்டு இறுதிக்குள் துவங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த ரயில் டில்லி, ஜிந்த் - சோனிபட் இடையேயான வழித்தடத்தில் 89 கி.மீ. தூரம் வரை இயக்கப்படும் எனவும் இந்தத் திட்டத்திற்கு 2800 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
பிறர் வைக்கும் ஸ்டேட்டஸ்களை லைக், ஷேர் மற்றும் டேக் செய்யும் வசதியை அறிமுகம் செய்தது வாட்ஸ்அப் நிறுவனம். இந்த புது அப்டேட், உலகமெங்கும் உள்ள பயனர்களுக்கு படிப்படியாகக் கொண்டு வரப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தப் புதிய அப்டேட் மூலம் பயனர்கள், தங்களுக்கு விருப்பப்பட்டவர்களை டேக் செய்து ஸ்டேட்டஸ் வைக்கவும், அதனை ரீஷேர் செய்யவும் முடியும். அப்படி டேக் செய்யப்படுபவரின் எண்ணோ, பயனர் பெயரோ பிறருக்கு தெரியாது.
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘நான் மருத்துவமனையில் இருக்கும்போது, சீக்கிரம் உடல் நலம் பெற என்னை வாழ்த்திய அனைத்து அரசியல் நண்பர்களுக்கும், திரைப்படத் துறையை சார்ந்தவர்களுக்கும், எனது அன்பு நண்பர்களுக்கும், நல விரும்பிகளுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். நான் நலம் பெற பிரார்த்தனை செய்து மனதார வாழ்த்திய, என் மீது அளவில்லா அன்பு வைத்திருக்கும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும், அனைத்து மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக் கூறியிருக்கிறார்.
FIFA 2026 உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டிக்காக அர்ஜெண்டினா அணிக்கு மீண்டும் திரும்பினார் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி. வெனிசுலா மற்றும் பொலிவியா அணிகளுடன் அடுத்தடுத்து மோதவுள்ள நிலையில், மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னர் அறிவிக்கப்பட்ட அர்ஜெண்டினா அணியில், காயத்தின் காரணமாக மெஸ்ஸி இடம்பெறாத நிலையில், காயத்தில் இருந்து மீண்டுள்ள அவர் தற்போது அணியில் இடம்பெற்றதோடு, அணியை வழிநடத்துவார் எனவும் கூறப்பட்டுள்ளது.