உலகிலேயே மிகவும் சிறிய ரூபிக் கியூப்-ஐ ஜப்பானை சேர்ந்த மெகாஹவுஸ் என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 0.33 கிராம் எடை கொண்ட இந்த கியூப், அலுமினியத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை 4.39 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த விக்டர் அம்பிரோஸ் கேரிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோ ஆர்.என்.ஏ மற்றும் மரபணு ஒழுங்குமுறை தொடர்பான ஆராய்ச்சிக்காக இந்த நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழந்த நிகழ்வு வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவை மீது அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை. மக்கள் அதிகம் கூடும் நிகழ்வுகளின்போது அடிப்படை வசதி, பாதுகாப்பை உறுதி செய்ய இனி வரும் காலங்களில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்" என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
‘ராயன்’ திரைப்படத்தின் ‘வாட்டர் பாக்கெட்’ வீடியோ பாடல் யூடியூபில் 100 மில்லியன் (10 கோடி) பார்வைகளைக் கடந்தது. அதேபோல், சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் உருவான ‘அமரன்’ திரைப்படத்தின் 'ஹே மின்னலே' பாடல் வெளியாகி இரண்டு நாளில் 5 மில்லியன் பார்வைகளைக் கடந்தது.
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக சனத் ஜெயசூர்யா நியமிக்கப்பட்டுள்ளார். 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரை அவர் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக இலங்கை கிரிக்கெட் அணியின் தற்காலிக பயிற்சியாளராக சனத் ஜெயசூர்யா செயல்பட்டு வந்த நிலையில், தற்போது தலைமை பயிற்சியாளராக அவர் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.