யுஎஸ் நியூஸ் அண்ட் வேர்ல்ட் ரிப்போர்ட் இதழ் படி, 2024-ம் ஆண்டுக்கான உலகின் சிறந்தநாடுகளின் பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சுவிட்சர்லாந்து முதல் இடம் பிடித்துள்ளது. 2-வதுஇடத்தில் ஜப்பான், 3-வது இடத்தில்அமெரிக்கா, 4-வது இடத்தில் கனடா, 5-வது இடத்தில் ஆஸ்திரேலியா ஆகியவை உள்ளன. வாழ்க்கைத் தரம், தொழில்முனைவு, சாகசம், சுறுசுறுப்பு, பாரம்பரியம், கலாச்சார நோக்கம் உட்பட 10 தன்மைகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் 89 நாடுகள் இடம்பெற்றுள்ள இந்தப் பட்டியலில் இந்தியா 33-வது இடத்தில் உள்ளது.
முதலீடுகளை ஈர்க்கும் வகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு முதலீட்டாளர்களை சந்தித்து அழைப்பு விடுத்து வருகிறார். பல்வேறு நிறுவனங்கள் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் இன்று (செப்டம்பர் 11) சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "போர்டு நிறுவனத்தை கொண்டு வர அமெரிக்காவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. போர்டு உடனான 30 ஆண்டு கால கூட்டணியை மீண்டும் புதுப்பிக்கும் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தோம். அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை பயன் உள்ளதாக அமைந்தது" என போர்டு நிறுவனம் (Ford Motor Company) தமிழகத்தில் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதை குறிப்பிட்டுள்ளார்.
நடப்பாண்டில் வரும் ஆயுதபூஜை, தீபாவளிப் பண்டிகை காலங்களில், நெய் மற்றும் இனிப்பு வகைகள் உள்ளிட்ட ஆவின் பொருட்கள் விற்பனையை 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை அதிகரிக்க ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து, ஆவின் நிறுவன மேலாண்மை இயக்குநர் சு.வினீத், "கடந்த ஆண்டில் 480 டன் ஆவின் நெய் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு 580 டன் ஆவின் நெய்விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை காலத்தில் ஒவ்வொரு மாவட்டத்தில் சிறப்புவாய்ந்த இனிப்பு வகைகளை ஆவின் மூலமாக சென்னை உட்படபல்வேறு நகரங்களுக்கு கொண்டுசென்று விற்கவும் திட்டமிட்டுள்ளோம்" என கூறியுள்ளார்
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி வெளியான 'தி கோட்' திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. இப்படத்திற்காக விஜய் ரூ.200 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படம் 6 நாள் முடிவில் உலகம் முழுவதும் ரூ.312 கோடி வரை வசூல் செத்துள்ளது.
பாராலிம்பிக் நடந்து முடிந்த நிலையில், பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பரிசுத்தொகை வழங்கினார். தங்கம் வென்றவர்களுக்கு 75 லட்சம் ரூபாயும், வெள்ளி வென்றவர்களுக்கு 50 லட்சம் ரூபாயும், வெண்கலம் வென்றவர்களுக்கு 30 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.