விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்ப 2,104 கோடி ரூபாய் மதிப்பில் சந்திரயான் 4 திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்த ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. 20,193 கோடி ரூபாய் செலவில் விண்வெளியில் ஆய்வு மையம் அமைக்கவும் ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
கேரள மாநிலம், மலப்புரத்தில், 38 வயதான ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் துபாயில் இருந்து திருப்பிய அவருக்கு குரங்கு அம்மை தொற்றுக்கான அறிகுறிகள் இருந்ததால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரின் இரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், இத்தொற்று உறுதியாகியுள்ளது. அவருக்கு West African clade-2 வகை குரங்கு அம்மை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதன் தாக்கம் சிறிய அளவிலேயே இருக்கும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
AI மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்களை எளிதில் கண்டறிய ஒரு புதிய மென்பொருளை வடிவமைக்க உள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. Al புகைப்படங்களை Watermark மூலம் அடையாளப்படுத்த SynthID என்ற தொழில்நுட்பத்தை உருவாக்க உள்ளதாம். Content Provenance and Authenticity (C2PA) என்ற அமைப்புடன் இணைந்து, டிஜிட்டல் புகைப்படங்களின் உண்மைத் தன்மையை ஆராய்தல், Deep Fake எனப்படும் போலியாக வடிவமைக்கப்பட்ட புகைப்படங்களை கண்டறிதல் உள்ளிட்டவற்றை செயல்படுத்த இது உதவியாக இருக்கும் எனவும் கூகுள் அறிவித்துள்ளது.
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கங்குவா’ திரைப்படத்தின் முக்கிய அப்டேட் இன்று 11 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. முதலில் ‘கங்குவா’ படம் தீபாவளி அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், அன்று ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' திரைப்படம் வெளிவருவதால், இந்தப் படத்தை நவம்பர் மாதம் வெளியிடுவதாக படக்குழு அறிவித்தது. இந்நிலையில், இன்று முக்கிய அப்டேட் என கூறியிருந்த படக்குழு, ‘கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14ம் தேதி வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.
45வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி 6 சுற்றுகளை கடந்த நிலையில், 7வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ், சீன வீரரை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளார்.