கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர், இரண்டரை ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்தப் போரில் உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை செய்து வருகின்றன. அதன்படி பிரிட்டன், 'ஸ்டார்ம் ஷேடோ' என்ற அதிநவீன ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்கியுள்ளது. இதை அறிந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ‘ஒருவேளை உக்ரைன் அந்த ஏவுகணைகளைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தினால், ரஷ்யா அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்’ என்று கூறியுள்ளார். அதற்கான ஆலோசனையிலும் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.
தற்போதைய நிலையில், உலகில் உள்ள மொத்த அணு ஆயுதங்களில் 8.0 சதவீதம், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம்தான் உள்ளன. இதில், ரஷ்யாவிடம் மட்டும் 6,732 அணு ஆயுதங்கள் உள்ளன. இதில், 1,572 அணு ஆயுதங்களுடன் கூடிய ஏவுகணைகள் முக்கிய இடங்களில் தயார் நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
சிங்கப்பூரின் மக்கள் தொகை 6 மில்லியனை எட்டியுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது. கல்வி, வேலை வாய்ப்புக்காக வெளிநாட்டினர் அதிக எண்ணிக்கையில் வருகை புரிந்ததால், கடந்த ஆண்டை விட 2 சதவீதம் இது அதிகரித்துள்ளது எனவும் விளக்கம் அளித்துள்ளது.
அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு விழுப்புரம் மாவட்ட காவல்துறை அனுமதி வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 33 நிபந்தனைகளில் 17 நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது, விழுப்புரம் மாவட்ட காவல்துறை அனுமதித்த இடங்களில் வாகனங்களை பார்க்கிங் செய்யவும், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களை மாநாட்டு திடலில் நிறுத்தி வைக்கவும் உத்தரவு. மேலும், பேனர் போன்றவற்றை போக்குவரத்திற்கு இடையூறாக வைக்கக் கூடாது, எல்.இ.டி. திரைகள், சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி வெளியான திரைப்படம் 'வாழை.' வெளியான தினத்திலிருந்து மக்கள் மத்தியில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்தத் திரைப்படம், அக்டோபர் 11ம் தேதி Hotstarல் வெளியாக இருக்கிறது.
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு 3 கோடியே 20 லட்ச ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. வீரர், வீராங்கனைகளுக்கு தலா 25 லட்ச ரூபாயும், பயிற்சியாளர்களுக்கு தலா 15 லட்ச ரூபாயும் இந்திய செஸ் கூட்டமைப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது.