2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்தியர்கள் ரஷ்யாவிற்கு விசா இன்றி பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்தியாவிலிருந்து ரஷ்ய தலைநகரான மாஸ்கோவிற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று மாஸ்கோ நகர சுற்றுலாக் குழு தலைவர் தெரிவித்துள்ளார். நடப்பு ஆண்டில் இதுவரை 28,500 இந்திய பயணிகள் ரஷ்ய தலைநகருக்கு வருகை தந்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 1.5 மடங்கு அதிகம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 9ம் தேதி நடைபெற்ற குரூப் - 4 தேர்வின் முடிவுகளை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி. 8,932 காலிப் பணியிடங்களுக்கான தேர்வை 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர். மேலும் குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் காலிப் பணியிடங்களை அதிகரித்துள்ளது டி.என்.பி.எஸ்.சி. 559 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டு, குரூப்-4 தேர்வுக்கான மொத்த காலி பணியிடங்களின் எண்ணிக்கை 9,491 ஆக உயர்ந்துள்ளது.
மண்டல பூஜைக்காக அடுத்த மாதம் 15ம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. பக்தர்களுக்காக 25 லட்சம் டின் அரவணை மற்றும் அப்பம் பாக்கெட்டுகளை தயாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘அடுத்த தளபதி நீங்களா?’ என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், "விஜய் இடத்துக்கு நான் வருவதாகச் சொல்வது தவறானது. யாருடைய இடத்தையும் யாரும் பிடிக்க முடியாது. இவ்வளவு பெரிய இடத்தை விட்டு விட்டு அவர் அரசியலுக்கு செல்கிறார் என்றால் அவரது இலக்கு வேறு. அவர் வேறு இடத்துக்குச் சென்றாலும் அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது" என்றார்.
அல்பேனியாவில் நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், ஆண்களுக்கான பிரீஸ்டைல் 57 கிலோ எடை பிரிவில் இந்திய மல்யுத்த வீரர் சிராக் சிக்கரா தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 23 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டிகளில் ஒட்டுமொத்தமாக ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஏழு வெண்கலப் பதக்கங்களுடன் 9 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.