‘இந்தியா எதிர்க்கட்சி கூட்டணி செயல்படும் விதம் குறித்து எந்த அதிருப்தியும் இல்லை. காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பிரதமர் வேட்பாளராக பரிந்துரைத்ததை நான் எதிர்க்கவும் இல்லை’ என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘ஐக்கிய ஜனதாதளம் அல்லது ஜேடியு மற்றும் இந்தியா எதிர்க்கட்சி கூட்டணி இணைந்து 2024 மக்களவை தேர்தலை சந்திக்கும்’ என்றும் அவர் வலியுறுத்தினார். எதிர்க்கட்சி கூட்டணிகள் கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்கள் குறித்து தாம் கோபமடையவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜபேயியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தையொட்டி நடைபெற்ற கூட்டத்தில் நிதிஷ்குமார் கலந்துகொண்டு பேசினார். அப்போது, ‘எனக்கு எந்தப் பதவியின் மீதும் ஆசையில்லை. நாங்கள் ஒன்றாக இணைந்து செயல்படுகிறோம். எங்களுக்கு கோபம் ஏதும் இல்லை. நீங்கள் யாரை வேண்டுமானாலும் பரிந்துரையுங்கள் என்றுதான் சொன்னோம். தொகுதிப் பங்கீடுகளை விரைந்து முடியுங்கள்’ என்று நாங்கள் கூறினோம்.’ என்றார்.
இந்தியா எதிர்க்கட்சி கூட்டணி அமைப்பதில் முக்கிய பங்காற்றிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்குள் அதிருப்தி நிலவுவதாகக் கூறப்படும் செய்தியை அவர் மறுத்தார். ‘நாங்கள் ஒற்றுமையுடன் இருக்கிறோம். நாங்கள் ஒற்றுமையுடன் போராடுவோம்’ என்றார் அவர்.
எதிர்க்கட்சி கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜுன கார்கே பரிந்துரைக்கப்பட்டது குறித்து நிதிஷ்குமார் அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வெளியாயின. இதையடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நிதிஷ்குமாருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் ஒரு பிரிவினர், எதிர்க்கட்சி கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயல்வதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
எதிர்க்கட்சி கூட்டணிகள் கூட்டத்தில் பேசியவை குறித்து நிதிஷ்குமார் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்பட்ட தகவல்களை ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் கடந்த வியாழக்கிழமை மறுத்திருந்தார். நானும், நிதிஷ்குமாரும் கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்களை ஆதரிக்கிறோம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டணி கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பிரதமர் வேட்பாளராக பரிந்துரைத்து முன்மொழிந்தார். அதை தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் வழிமொழிந்தார். இந்த நடவடிக்கைக்கு உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனையின் தலைவர் உத்தவ் தாக்கரேயும் ஆதரவு தெரிவித்திருந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் குமார் ஜா, பிரதமர் வேட்பாளராக யாரை முன்னிறுத்தினாலும் அதை தமது கட்சி ஆதரிக்கும் என்றார். ஜனவரி மாத இறுதிக்குள் தொகுதிப் பங்கீட்டை பேசி முடிக்க வேண்டும் என்று தமது கட்சி வலியுறுத்தியதாகவும் அவர் கூறினார்.