சென்னை கே.கே.நகர் பகுதியில் வசிப்பவர் நிக்கி சரண். 33 வயதாகும் இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். நிக்கி சரணின் தோழி வந்தனா சாலிகிராமம் பகுதியில் வசிக்கிறார். இவர்கள் இருவரும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
இன்று இவர்கள் இருவரும் பணி முடித்துவிட்டு சென்னை, தேனாம்பேட்டை விஜயராகவா தெருவில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தனர். அப்பொழுது, அந்தப் பகுதியில் பறந்து கொண்டிருந்த காத்தாடி நூல் ஒன்று திடீரென்று நிக்கி சரணின் கழுத்தில் மாட்டி உள்ளது. மாஞ்சா போடப்பட்டு மிகவும் ஷார்ப்பாக இருந்த அந்த நூல் கழுத்தில் மாட்டியதால் கழுத்தறுந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார் நிக்கி சரண். அவருடன் வந்த பெண் தோழி வந்தனா இதைக் கண்டு, மிகவும் பதற்றத்தோடு தனது நண்பர் நிக்கியை காப்பாற்ற மாஞ்சா நூலை இழுத்தபொழுது, அவரது கையும் வெட்டுப்பட்ட நிலையில் அவரும் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். பிறகு இருவரும் வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டு உள்ளனர்.
அவர்களின் அலறல் சத்தத்தைக் கேட்டு, அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்கள் உடனே ஓடி வந்து அவர்கள் இருவரையும் மீட்டு அதே தெருவில் இருந்த தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்து முதலுதவி கொடுத்து உள்ளனர். அதனை அடுத்து நிக்கி சரணுக்கு கழுத்திலும், வந்தனாவுக்கு கையிலும் பலமான வெட்டுக்காயம் ஏற்பட்டு இருந்ததால், அவர்கள் இருவரையும் மேல் சிகிச்சைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். கழுத்து அறுபட்டு படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் இருக்கும் நிக்கி சரண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மாஞ்சா நூல் அறுத்ததில் கையில் பலத்த காயமடைந்த வந்தனாவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.