செய்திகள்

இ-பாஸ்போர்ட் நடைமுறையால் எளிமையாக்கப்படும் பாஸ்போர்ட் சேவைகள்.

கிரி கணபதி

ந்தியாவில் பாஸ்போர்ட் சேவைகளை எளிமையாக்க மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் மக்களுக்கு பாஸ்போர்ட் வழங்குவதற்கு பின்பற்றப்பட்டு வந்த முறைகளில் மாற்றங்கள் ஏற்படலாம் எனச் சொல்லப்படுகிறது. 

சமீபத்தில் டெல்லியில் நடந்த பாஸ்போர்ட் சேவா நிவாஸ் நிகழ்ச்சியில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் பாஸ்போர்ட் வாங்குவதற்காக ஆண்டுக் கணக்கில் காத்திருக்கும் மக்களுக்காக நற்செய்தி ஒன்றையும் தெரிவித்தார். அதாவது விரைவில் பாஸ்போர்ட் சேவா ப்ரோக்ராம் வெர்ஷன் 2.0 வின் கீழ் அனைவருக்கும் இ-பாஸ்போர்ட் வழங்கப்படும் எனக் கூறினார். 

சமீப காலமாகவே டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏனென்றால், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மாறிக்கொள்வதை அவசியமானதாக மத்திய அரசு பார்க்கிறது. அதன் அடிப்படையில் பழைய பாஸ்போர்ட் வழங்கும் நடைமுறைகளை முற்றிலுமாக மாற்றி, மக்கள் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய எலக்ட்ரானிக் பாஸ்போர்ட் வழங்குவதற்காக முடிவெடுத்துள்ளது. 

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த, விரைவில் பாஸ்போர்ட் சேவா ப்ரோக்ராம் வெர்ஷன் 2.0 என்ற சேவை தொடங்கி, நாட்டு மக்களுக்கு எலக்ட்ரானிக் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "எல்லா தரப்பு இந்திய மக்களும் எளிமையாக அணுகக் கூடிய வகையில் நம்பகத்தன்மையாகவும், வெளிப்படையாகவும், அதே நேரத்தில் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்றவாறு பாஸ்போர்ட் சேவைகள் வழங்கப்படும்" என உறுதி அளித்துள்ளார். 

எனவே, இனி நாட்டு மக்கள் பாஸ்போர்ட் வாங்குவது எளிதாக மாற்றி அமைக்கப்பட்டு, வெளிநாட்டு பயணங்கள் எவ்வித குழப்பங்களும் இன்றி நடக்கும் என சொல்லப்படுகிறது. இந்த சேவையை நடைமுறைப்படுத்த வெளிநாட்டிலும் இந்தியாவிலும் இருக்கும் பாஸ்போர்ட் மைய அலுவலர்கள் தயாராக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

எலக்ட்ரானிக் பாஸ்போர்ட் என்றால் என்ன?

இ - பாஸ்போர்ட் என்பது, முன்பு பயன்படுத்தி வந்த காகிதத்தால் அச்சிடப்பட்ட பாஸ்போர்ட் போல் அல்லாமல், எலக்ட்ரானிக் சிப் பொருத்தப்பட்டு வழங்கப்படும். இதில் ஒருவருடைய எல்லா தகவல்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு சேமிக்கப்பட்டிருக்கும். இதனால், வெளிநாட்டுப் பயணங்களின் போது உண்மையான நபர் யார் என்பதை வெரிஃபிகேஷன் செய்வதில் சிக்கல் எதுவும் இருக்காது. அதேபோல, உங்களுடைய பயோமெட்ரிக் அடையாங்களும் இதில் இணைக்கப்படுவதால், இதைப் பயன்படுத்தி போலி பாஸ்போர்ட் செய்ய முடியாது. 

அதேபோல ஒருவருடைய பாஸ்போர்ட் தொலைந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ அதை மீண்டும் பெறுவது எளிது. இதனால் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று அங்கேயே சிக்கிக்கொள்ளும் மக்களை எளிதாக அடையாளம் காணலாம் என்கிறார்கள். மேலும் சராசரியாக ஒரு பாஸ்போர்ட் வாங்கும் கால நேரமும் இந்த இ-பாஸ்போர்ட் நடைமுறையால் குறைக்கப்படும் எனச் சொல்லப்படுகிறது. 

இப்படி பல்வேறு நன்மைகள் கொண்ட இ-பாஸ்போர்ட் வழங்கும் சேவை, அடுத்த சில மாதங்களில் தொடங்கப் படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெஜ் ஸ்டஃப்டு யம்மி பப்ஸ்!

பிரிட்டிஷ் அரச மகுடத்தை அலங்கரிக்கும் கோஹினூர் வைரம் உண்மையில் யாருக்கு சொந்தம் தெரியுமா?

ரஷ்யா- உக்ரைன் போரில் ஈடுபட்ட இந்தியர்கள் மீட்பு!

நோக்கியாவின் பரிணாமம்… மொபைல் உலகின் முன்னோடி! 

ஹிந்தி பிக்பாஸுக்கே தமிழ் சொல்லிக் கொடுத்த ஸ்ருதிகா… தமிழ் ரசிகர்கள பிடிச்சுட்டாருங்க!

SCROLL FOR NEXT