கர்நாடகத் தேர்தலில் ஏழைகளுக்கு வெற்றி கிடைத்துள்ளது. பணக்காரர்களை அவர்கள் ஆதரிக்கவில்லை. காங்கிரஸ் வெற்றி இதர மாநிலங்களிலும் எதிரொலிக்கும். இந்த தேர்தலில் ஏழைகளுக்காக போராடிய காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தல் முலம் காங்கிரஸ் கட்சிக்கு அமோக வெற்றியை கர்நாடக மக்கள் தேடித்தந்துள்ளனர். மக்கள் வெறுப்பு பேச்சுகளை புறக்கணித்து அன்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் மக்களுக்கு அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று தில்லியில் நடைபெற்ற கர்நாடக தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தின்போது ராகுல்காந்தி தொண்டர்களிடம் பேசினார்.
முன்னதாக, தேர்தல் கருத்துக்கணிப்புகளின்படி காங்கிரஸ் 138-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சியமைக்கும் நிலையில் உள்ளது. பா.ஜ.க. 60 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. தேர்தல் தோல்வியை முதல்வர் பசவராஜ் பொம்மை ஒப்புக் கொண்டுள்ளார்.
சோனியாவுக்கு அளித்த வாக்கை நிறைவேற்றிவிட்டேன்: சிவக்குமார்
இதனிடையே கர்நாடகத்தில் காங்கிரஸ் அதிக இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ள நிலையில் மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார், இந்த தேர்தலில் காங்கிரஸை ஆட்சியில் அமர்த்துவதாக சோனியா, ராகுல், பிரியங்கா மற்றும் கார்கேவிடம் உறுதியளித்திருந்தேன். அதை இப்போது நிறைவேற்றிவிட்டேன் என்று குறிப்பிட்டார். மேலும் தாம் சிறையில் இருந்தபோது சோனியா காந்தி வந்து நேரில் பார்த்து ஆறுதல் தெரிவித்ததை மறக்க முடியாது என்று கண்ணீர் மல்க குறிப்பிட்டார்.
தேர்தல் வெற்றிக்கு உழைத்த முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் இதர தலைவர்கள், தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் கடந்த மூன்று ஆண்டுகளாக சரியான தூக்கமில்லாமல் காங்கிரஸ் வெற்றிக்காக உழைத்தேன். அதற்கு நல்ல பலன் கிடைத்துவிட்டது. சோனியா என் மீது வைத்திருந்த நம்பிக்கைகு நன்றி. காங்கிரஸ் முதல்வர் யார் என்பதை மேலிடம் முடிவு செய்யும் என்றும் சிவக்குமார் கூறினார்.