செய்திகள்

உடல் பருமன் போலீசுக்கு சிக்கல்: அசாமை தொடர்ந்து ஹரியானாவிலும் அதிரடி!

கல்கி டெஸ்க்

காவல் துறையில் சீர்திருத்தங்களைக் கொண்டுவரும் முயற்சியாக அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா கடந்த வாரம், ‘காவல் துறையினர் தங்கள் உடலை முழுத் தகுதியுடன் வைத்திருப்பது அவசியம்’ என்று தெரிவித்திருந்தார். அதோடு, ‘அடுத்துவரும் மூன்று மாதங்களுக்குள் உடல் பருமனைக் குறைக்க முடியாத காவலர்களுக்குக் கட்டாய ஓய்வு திட்டத்தின்படி ஓய்வு கொடுக்கப்படும். இதில் மருத்துவப் பிரச்னை உள்ளவர்களுக்கு விதி விலக்கு உண்டு’ என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.  

அரசின் இந்த அறிவிப்பு அசாம் காவல் துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு, இது உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அம்மாநில டிஜிபி ஜிபி சிங் தெரிவித்து இருந்தார். இது குறித்து அவர், "அசாம் போலீசாருக்கு இன்றிலிருந்து மூன்று மாதங்கள் அவகாசம் கொடுக்கப்படும். அதற்குள்ளாக உடல் எடை அதிகம் கொண்ட போலீஸார் தங்கள் எடையை குறைத்துக்கொள்ள வேண்டும். மூன்று மாதங்களுக்குப் பிறகு அனைவருக்கும் பிஎம்ஐ (உயரத்துக்கேற்ற எடை) சோதனை செய்யப்படும். இதில் பிஎம்ஐ 30+ இருப்பவர்களுக்கு அடுத்த மூன்று மாதங்கள் (நவம்பர் வரை) அவகாசம் கொடுக்கப்படும். அதன் பின்னரும் அவர்கள் மேற்குறிப்பிட்ட பிஎம்ஐக்கு மேல் இருந்தால் அவர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுக்கப்படும்" என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அசாம் மாநிலத்தைத் தொடர்ந்து ஹரியானாவிலும் உடல் பருமன் கொண்ட காவல் துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டு இருக்கிறது. ‘அதிக உடல் எடை கொண்ட காவலர்கள் மீண்டும் உடல் தகுதி பெறும் வரை தண்டனையாகக் கருதப்படும் காவலில் நிற்க வைக்கும் பணிக்கு மாற்றப்படுவார்கள்’ என ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் உத்தரவிட்டு இருக்கிறார்.

இது சம்பந்தமாக, ஹரியானா உள்துறை கூடுதல் தலைமைச் செயலருக்கு எழுத்துப்பூர்வமான உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அதில், "பல காவல்துறை அதிகாரிகள் அதிக உடல் எடையுடன் இருக்கின்றனர். காவல்துறை அதிகாரிகள் / பணியாளர்களின் உடல் தகுதியைப் பேணுவதற்காக, அதிக உடல் எடை கொண்ட அனைத்துக் காவல்துறை அதிகாரிகளும் / பணியாளர்களும் காவல் பணிக்கு மாற்றப்பட்டு, அவர்கள் பணிக்குத் தகுதி பெறாத வரை உடற்பயிற்சி செய்ய வேண்டும்" என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

‘குற்றங்களைத் தடுக்க காவல் துறையினரின் உடல் தகுதி என்பது மிகவும் முக்கியம்’ எனக் குறிப்பிட்டிருக்கும் உள்துறை அமைச்சர் அனில் விஜ், ‘இதைக் கருத்தில் கொண்டே இந்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு இருப்பதாகவும், இதன் மூலம் மாநிலத்தைக் குற்றமற்றதாக மாற்ற முடியும்’ எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.

உங்க உடலில் அதிகமாக உப்பு இருக்கிறது என்பதற்கான அறிகுறிகள்!  

பெட்ரோல் பங்கில் கட்டாயம் இருக்க வேண்டிய வசதிகள்... இத்தனை நாள் இது தெரியாம போச்சே!

RCB Vs CSK: பெங்களூரு அணியே வெற்றிபெறும் – பிரையன் லாராவின் கணிப்பு!

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் 15 உணவுகள்!

சிறப்பான நாள் அமைவதற்கு காலையில் பின்பற்ற வேண்டிய 5 வழிமுறைகள்!

SCROLL FOR NEXT