செய்திகள்

ராகுல் தேச ஒற்றுமைக்கு எதிரானவர், “பப்பு” என்பது வெளிநாட்டினருக்கு தெரியாது!

ஜெ.ராகவன்

வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல்காந்தி, தேசஒற்றுமைக்கு எதிரானவர். நாட்டை பிளவுபடுத்துவதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றஞ்சாட்டினார்.

லண்டனில் சமீபத்தில் உரையாற்றிய ராகுல்காந்தி, நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை கடுமையாக விமர்சித்துள்ளதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் செய்தி பதிவிட்டுள்ள அமைச்சர் கிரண் ரிஜிஜு, காங்கிரஸ் கட்சியின் இளவரசனாக தனக்கு தானே பட்டம் சூட்டிக் கொண்டுள்ள ராகுல்காந்தி, எல்லை மீறி செயல்படுகிறார்.

ராகுல் காந்தி ஒரு பப்பு (ஒரு குழந்தை) என்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால், இது வெளிநாட்டினருக்குத் தெரியாது. மேலும் அவரது முட்டாள்தனமான அறிக்கைக்கு பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இந்தியாவுக்கு எதிரான அவரது கருத்துகளை இந்தியாவுக்கு எதிரான தீயசக்திகள் தவறாக பயன்படுத்தி இந்தியாவின் புகழை கெடுத்து வருகின்றன.

லண்டனில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியை விமர்சித்தும், இந்தியாவில் உள்ள ஜனநாயக அமைப்புகளை இழிவுபடுத்தும் வகையிலும் பேசிய விடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் பேசும்போதெல்லாம் மைக்குகள் அணைக்கப்படுகின்றன என்று ராகுல் காந்தி கூறுகிறார். ஆனால், நாடாளுமன்றத்தில் அதிகம் பேசியது ராகுல்காந்திதான். ராகுல் காந்திக்கும் பிற எதிர்க்கட்சியினருக்கும் பிரதமர் நரேந்திர மோடியை குறைகூறுவதே வேலையாகப் போய்விட்டது.

லண்டனில் பேசிய ராகுல்காந்தி, பிரதமர் மோடி தலைமையிலான அரசு எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரிப்பதாக குற்றஞ்சாட்டியிருந்தார். பத்திரிகைகள், நாடாளுமன்றம் உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் சீர்குலைக்கப்படுகின்றன. இந்தியாவில் ஜனநாயகம் இருக்கிறதா என்பதே கேள்விக்குறியாகும் என்று ராகுல் குறிப்பிட்டிருந்தார்.

மத்திய அரசின் எதேச்சாதிகார போக்கை மக்களுக்கு எடுத்துக்காட்டவே ஒற்றுமையாத்திரை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார். பத்திரிகைகளின் குரல் ஒடுக்கப்படுகின்றன என்பதற்கு பி.பி.சி. ஆவணப் படத்துக்கு தடை விதிக்கப்பட்டதும். அங்கு அதிரடி சோதனை நடத்தப்பட்டதும் சிறந்த உதாரணமாகும் என்றும் ராகுல்காந்தி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

உணவுத் தரக் குறியீட்டில் ஹைதராபாத்திற்கு கடைசி இடம் - NCRB அறிக்கை

நெல்லூர் போண்டாவும், ஜவ்வரிசி அல்வாவும் - செம டேஸ்ட் போங்க!

இந்தியர்களிடம் 100 கோடி மோசடி செய்த சீன நாட்டவர் அதிரடியாக கைது!

ஆணோ பெண்ணோ... 50 வயது ஆகிவிட்டதா? எலும்பு சத்து குறைபாடு வருமே!

சுடச்சுட வெந்நீர் குடிக்கக் கூடாத 5 பேர் யார் தெரியுமா?

SCROLL FOR NEXT