நடுத்தர வகுப்பினர் நோயினால் பாதிக்கப்படும்போது அவர்கள் உடனே ஓடுவது தனியார் மருத்துவமனைக்குத்தான். ஆனால் சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் போது மருத்துவமனை நிர்வாகம் கொடுக்கும் சிகிச்சைக்குண்டான பில்லை பார்த்தவுடன் பலருக்கும் மயக்கம்தான் வரும்.
இந்த நிலையை மாற்றத்தான் அரசு மருத்துவமனையிலேயே கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் ஒரு பிரிவை அரசு கொண்டுவந்தது. இது ஓரளவு வசதி படைத்தவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கட்டண படுக்கை பிரிவு தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு விருகிறது. மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றுள்ள நிலையில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் இன்று கட்டண மருத்துவ படுக்கை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
மக்கள் மத்தியில் தனியார் மருத்துவமனை மீதான மோகத்தை குறைக்கும் வகையில் அரசு பே வார்டுகள் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் ரூ. 1.25 கோடியில் புதிதாக நிறுவப்பட்டுள்ள கட்டண சிகிச்சை பிரிவை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுப்ரமணியன்,
சென்னையில் உள்ளது போல் சேலம், மதுரை, கோவை அரசு மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சை பிரிவு தொடங்கப்படும் என 2022ல் அறிவிக்கப்பட்டது.
அதன்படி சேலத்தில் தற்போது 10 கட்டண படுக்கைகள் வசதி கொண்ட சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டுள்ளது, இதில் தனியார் மருத்துவமனையை விட கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னைக்கு வெளியே முதன் முதலில் சேலத்தில்தான் பே வார்டு துவங்கப்பட்டுள்ளதாகவும், இதனை தொடர்ந்து மதுரை மற்றும் கோவையில் துவங்கப்பட இருப்பதாகவும் தெரிவித்த அவர் மக்கள் மத்தியில் தனியார் மருத்துவமனை மீதான மோகத்தை குறைக்கவே தமிழக அரசு பே வாட்டுஸ் எனும் நடைமுறையை கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் அரசுக்கு வந்த புகாரின் பேரில் முதல்வர் மற்றும் அமைச்சர்களின் திடீர் விசிட் மூலம் அரசு மருத்துவர்கள் பணி நேரத்தில் பிற தனியார் மருத்துவமனைக்கு பணிக்கு செல்வது தடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.