சென்னையில் தி.மு.க சார்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, அமைச்சர் சேகர் பாபு புகழ்ந்து பேசி கட்சி விழாவை சினிமா விழா போல் நடத்திக் காட்டியிருககிறார்.
தி.மு.கவைப் பொறுத்தவரை அனைத்த விழாக்களிலும் ஸ்டாலினுக்கு அடுத்த படியாக உதயநிதி முன்னிறுத்தப்பட்டு வருகிறார். இன்று மதுரையில் நடைபெறவிருக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலக விழா போஸ்டர்களில் கூட உதயநிதிக்கு தனியிடம் தரப்பட்டிருக்கிறது.
உதய சூரியன் தந்த இதய நிலாவே, மாமன்னன் தந்த அதிவீரனே என்று உதயநிதி ஸ்டாலினை புகழ்ந்த அமைச்சர் சேகர் பாபு, இனி உங்களை வீராதிவீரன் என்றும் உங்களை அழைப்போம். அதற்குக் காரணம் உங்களின் அரசியல் செயல்பாடுதான். அரசியலில் எந்த எதிர்ப்புகள் வந்தாலும் எதிர்த்துக் குரல் கொடுப்பதால் வீராதி வீரனாக உதயநிதி ஸ்டாலின் இருப்பதாக பேசினார்.
நூறு இளைஞர்களை தந்தால் இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன் என்றார் விவேகானந்தர். தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும ஆயிரக்கணக்கான இளைஞர்களை உதயநிதி ஸ்டாலின், தி.மு.க இளைஞரணியில் சேர்த்திருககிறார். அதன் மூலமாக இன்னொரு 50 ஆண்டுகாலம் தி.மு.க தங்கு தடையின்றி பயணிக்க பெரும் பாதை அமைத்திருப்பதாகவும் பேசினார்.
தி.மு.கவின் பயற்சிப் பட்டறையாகவும், தி.மு.கவை வழிநடத்தக்கூடிய இடத்திலும் என்றும் இருப்போம் என்றும் தளபதி ஸ்டாலின் மற்றும் அவரது வழித்தோன்றல் உதயநிதி ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருப்போம் என்றும் பேசிய சேகர் பாபு, அன்போடு வருபவர்களுக்கு உதவும் நிதியாக இருக்கும் உதயநிதி, வம்போடு வருபவர்களை எட்டி உதைக்கும் உதைய நிதியாகவும் இருப்பதாக பேசி கூட்டத்தை கலகலப்பாக்கினார்.
தி.மு.க சார்பில் நடைபெறும் விழாக்களில் கட்சித்தலைமையை புகழ்வது வழக்கமாக நடக்கக்கூடிய விஷயம் என்றாலும் சமீப காலங்களில் அரசு விழாவா அல்லது அரசியல் விழாவா என்று சந்தேகப்படுமளவுக்கு மேடை பேச்சுகள் அமைந்து வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.