Terrorists launch series of attacks in Kashmir 
செய்திகள்

தீவிரவாதிகளின் தொடர் தாக்குதல்: இயல்பு நிலைக்குத் திரும்பியதா காஷ்மீர்?

ராஜமருதவேல்

ந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்தே காஷ்மீரில் அமைதி என்பது இல்லாமல் போய் விட்டது. இந்திய - பாகிஸ்தான் விடுதலைக்குப் பின் காஷ்மீர் எந்த நாடோடும் இணைய விரும்பாமல் தனியாக இருக்கவே விரும்பியது. ஆனால் , பாகிஸ்தான் கண்ணை காஷ்மீர் உறுத்தவே அவர்கள் படையெடுத்து காஷ்மீரை ஆக்கிரமித்தனர்.

பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த காஷ்மீர் மன்னர் ஹரிசிங் இந்தியாவுடன் காஷ்மீரை இணைத்தார். இந்தியப் படைகள் பாகிஸ்தான் மீது போர் தொடுத்து குறிப்பிட்ட பகுதியை மீட்டது. ஆயினும், காஷ்மீரின் பெரும் பகுதி கில்கிட்- பல்டிஸ்தான், ஆசாத் காஷ்மீர் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பிலும் அக்சாய்- சின் என்ற பெயரில் சீனாவின் ஆக்கிரமிப்பிலும் உள்ளன.

1980கள் வரை காஷ்மீரில் ஓரளவு அமைதி நிலவி வந்தது. ஆனால், அதற்குப் பின்னர் தீவிரவாதக் குழுக்கள் தோன்றி அடிக்கடி வன்முறையும் தொடர் குண்டு வெடிப்புகளும் நிகழ்த்த அங்கு இயல்பு நிலை பாதித்தது. 4 தசாப்தங்களாக காஷ்மீரின் பெரும்பாலான நாட்கள் ஊரடங்கு உத்தரவிலேயே கழிந்தது. காஷ்மீரின் சுற்றுலாத்துறை முற்றிலும் அழிந்தது.

காஷ்மீர் என்றாலே தினசரி குண்டு வெடிப்பு தொடர்கதை ஆனதால் மற்ற பகுதி இந்தியர்கள் அங்கு செல்லவே அச்சப்பட்டனர். திரைப்படங்களில் கூட காஷ்மீர் பகுதியைக் காட்ட குலு, மணாலியைதான் காட்சிப்படுத்தினார்கள். கடந்த பத்து ஆண்டுகளாக  இரண்டாகப் பிரிக்கப்பட்ட காஷ்மீர் - லடாக் பகுதியில் தீவிரவாத நடவடிக்கையின் காரணமாக மக்களிடையே முழு அமைதியே நிலவி வந்தது. சிறிது சிறிதாக முன்னேற்றப் பாதையில் காஷ்மீர் செல்ல, அதன் சுற்றுலாத்துறையும் வளர்ச்சியடைந்தது. லடாக் பகுதிக்கு இளைஞர்கள் வாகனங்களில் படையெடுத்தனர். இந்த நிலைமை தற்போது மாறி வருகிறது.

காஷ்மீரில் ஒரு தசாப்தம் அமைதியாக கழிந்த பின்னர் கடந்த மாதம் 20ம் தேதி சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு மருத்துவர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து 24ம் தேதியன்று பாரமுல்லா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த தொழிலாளி பிரித்தம் சிங் படுகாயமடைந்தார். அதையடுத்து, 26ம் தேதி பாரமுல்லா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த ஜீவன் சிங் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து 28ம் தேதியன்று அக்னூர் பகுதியில் இராணுவ வாகனத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் இராணுவ நாய் பாண்டம் உயிரிழந்தது. அதைத் தொடர்ந்து 29ம் தேதி இந்திய ராணுவம் அக்னூரில் பாதுகாப்பு படையினர்  நடத்திய தாக்குதலில் மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

அதையடுத்து, 29ம் தேதி புல்வாமா போலீசார் பத்து கையெறி குண்டுகளுடன் ஒரு தீவிரவாதியை கைது செய்தனர். அடுத்த நாள் அக்டோபர் 30ம் தேதியன்று பந்திப்போராவில் பாதுகாப்பு படையினர் சோதனையில் ஒரு தீவிரவாதியின் வீட்டில் பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

தொடர்ந்து இம்மாதம் 1ம் தேதி வெள்ளிக்கிழமையன்று சில பயங்கரவாதிகள் புத்காம் பகுதியில் வேலை செய்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 2 பேர் படுகாயமடைந்தனர்.

அதைத் தொடர்ந்து மறுநாள் சனிக்கிழமையன்று நடத்தப்பட்ட தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் தேடப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் முக்கிய தளபதியான உஸ்மான் லஷ்காரி உட்பட மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கையில் 2 போலீஸ்காரர்கள் மற்றும் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்தனர்.

நேற்று காஷ்மீரின் தலைநகரான ஶ்ரீநகரில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் கூடியிருந்த ஞாயிற்றுக்கிழமை சந்தையில் திடீரென்று பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசித் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 12 பேர் படுகாயமடைந்தனர். இதனால் காஷ்மீர் தனது முந்தைய அமைதியற்ற நிலையை மீண்டும் அடைந்துள்ளது.

பெங்களூரு விதான சௌதா - அரங்கம் உருவான விவரம் தெரியுமா?

உங்களை நீங்களே நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள்!

மாற்ற முயற்சிப்பதை விட ஏற்றுக்கொள்வது மிகுந்த மகிழ்ச்சி தரும் - எதில்? எங்கே? எப்போது?

வாழ்வில் ஒருவரை உயர்ந்த மனிதராக மாற்றும் 7 பழக்க வழக்கங்கள்!

தமிழ் மூதாட்டி 'ஔவையார் அம்மன்' கோயில் எங்கிருக்கிறது தெரியுமா?

SCROLL FOR NEXT