செய்திகள்

தமிழக தலைமை தகவல் ஆணையராக ஷகீல் அக்தர் நியமனம்!

கல்கி டெஸ்க்

மிழகத்தின் தலைமை தகவல் ஆணையராகப் பணியாற்றிய ஆர்.ராஜகோபால் பதவிக் காலம் முடிந்த பிறகும் அந்த இடம், நீண்ட காலம் நிரப்பப்படாமல் இருந்தது. அதுமட்டுமின்றி, அவருக்குக் கீழ் பணியாற்றிய தகவல் ஆணையர்கள் எஸ்.செல்வராஜ், எஸ்.டி.தமிழ்ச்செல்வன், ஆர்.பிரதாப்குமார், எஸ்.முத்துராஜ் , பி.தனசேகரன், எம்.ஸ்ரீதர் ஆகியோரின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது.

பொதுவாக, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள்தான் இதுபோன்ற பொறுப்புக்கு நியமிக்கப்படுவது வழக்கம். இது தொடர்பான ஆலோசனைகள் கடந்த சில நாட்களாகவே நடைபெற்று வந்தது. தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் தலைமை ஆணையர் உள்ளிட்ட நான்கு ஆணையர்களின் பதவிகள் காலியாக இருந்தன. இந்தப் பதவிக்குத் தகுதியானவர்களைத் தேர்வு செய்ய அக்பர் அலி தலைமையில் கமிட்டி ஒன்றை அமைத்தது தமிழக அரசு. தகுதியானவர்களை தேர்வு செய்து அந்தப் பட்டியலை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பிக்க வேண்டியது இந்தக் கமிட்டியின் பணி. அந்த வகையில், தகுதியானவர்களை தேர்வு செய்வதற்காக பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டது.

தமிழக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கூட இந்தப் பதவிக்கு விண்ணப்பம் செய்திருந்ததாகக் கூறப்பட்டது. தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு இந்த மாதம் ஓய்வு பெற இருக்கும் நிலையில், அவருக்கு இந்தப் பதவி வழங்கப்படலாம் என்றும் கூறப்பட்டது. தகுதியானவர்கள் பட்டியலை சமீபத்தில் இந்தத் தேர்வுக் குழு தலைவர் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி குழு தயார் செய்தது. தமிழக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு பெயரும் அதில் இடம்பெற்று இருந்ததாகக் கூறப்படுகிறது. இவர் தவிர, ஐபிஎஸ் அதிகாரி ஷகீல் அக்தர் உள்ளிட்ட பலரும் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், கடைசியில் இந்த போட்டியிலிருந்து வெ.இறையன்பு விலகிக் கொண்டார். தமிழக தலைமை செயலாளராக இருக்கும் இவரின் பதவிக்காலம்  ஜூன் வரை உள்ளது. அதற்கு முன் அவர் இந்தப் பதவியை பெற வேண்டும் என்றால் அவர் விஆர்எஸ் வாங்க வேண்டும் என்று கோட்டை வட்டாரங்கள் சொல்கின்றன. எனவேதான், அவர் தகவல் ஆணையர் பதவிக்கான போட்டியிலிருந்து விலகிக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

சமீபத்தில், அக்பர் அலி தலைமையிலான கமிட்டி தனது தேர்வுப் பட்டியலை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமீபத்தில் ஒப்படைத்தது. இந்த நிலையில் தற்போது முன்னாள் டிஜிபி ஷகீல் அக்தர் தமிழக தலைமை தகவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். இவரோடு சேர்த்து முன்னாள் ஏடிஜிபிக்கள் தாமரைக்கண்ணன், பிரியாகுமார் ஆகியோரும் தகவல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து இம்மாதம் கடையில் ஓய்வு பெற இருக்கும் வெ.இறையன்புவுக்கு என்ன பதவி கொடுக்கப்படும் என்பது பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.

ஸ்படிக மாலையால் கிடைத்த விஷ்ணு சஹஸ்ரநாமம்!

‘கத்புட்லி’ பொம்மலாட்டம் பற்றித் தெரிந்து கொள்ளுவோமா?

நல்ல சகுனம், கெட்ட சகுனம் எவை தெரியுமா?

உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உணவுகளை இப்படிச் சாப்பிட்டு பாருங்களேன்!

க்ளூடாமைன் அதிகமுள்ள உணவுகள் தெரியுமா?

SCROLL FOR NEXT