மகாராஷ்டிராவில் சிவசேனா (ஷிண்டே) எம்.எல்.ஏ சஞ்சய் கெய்க்வாட், ராகுல் காந்தி நாக்கை அறுப்பவர்களுக்கு 11 லட்சம் தருவதாக கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
சிவசேனா கட்சியின் எம்.எல்.ஏ சஞ்சய் கெய்க்வாட் அவ்வப்போது சர்ச்சைக்குறிய வார்த்தைகள் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஏற்கனவே தான் புலியை வேட்டையாடி இருப்பதாக சஞ்சய் கெய்க்வாட் தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார். அதோடு போலீஸ்காரர் ஒருவரை தனது வீட்டில் நிறுத்தி வைத்திருந்த காரை கழுவ செய்து சர்ச்சையில் சிக்கிக்கொண்டார்.
அந்தவகையில் தற்போது இவர், “நாங்கள் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால், ராகுல்காந்தி மக்களுக்கான இட ஒதுகீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். மக்களவை தேர்தலில் தவறான செய்திகளை பரப்பினார். இப்போது இட ஒதுக்கீட்டு விஷயத்தில் இப்படி பேசுகிறார். இதுவே காங்கிரஸ் கட்சியின் உண்மை முகத்தை காட்டுகிறது. எனவே ராகுல் காந்தியின் நாக்கை யாராவது அறுத்தால் அவர்களுக்கு எனது தரப்பில் ரூ.11 லட்சம் சன்மானமாக வழங்கப்படும். எனது கருத்துக்காக எந்த வித சட்ட நடவடிக்கையையும் சந்திக்க தயாராக இருக்கிறேன். அதேசமயம் எனது கருத்தில் உறுதியாக இருக்கிறேன்.” என்று பேசினார்.
இவரின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் காங்கிரஸ் கட்சியினர் ஒருவர் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் பாலாசாஹேப் தோரட் இது தொடர்பாக அளித்த பேட்டியில், ''சிவசேனா எம்.எல்.ஏ பேச்சு பொறுப்பற்றதாகும். ராகுல் காந்தியை அவமதிக்கவேண்டும் என்ற நோக்கில் இதை தெரிவித்துள்ளார்.'' என்றார். மாநில காங்கிரஸ் தலைவர் நானா பட்டோலே இது குறித்து கூறுகையில், "முதல்வர் ஏக்நாத் ஷிண்டே எம்.எல்.ஏ கெய்க்வாட்டை கட்டுப்படுத்தவேண்டும்" என்றார்.
மேலும் பா.ஜ.க மாநில தலைவர் சந்திரசேகர் பேசியதாவது, “சஞ்சய் கெய்க்வாட் பேசிய கருத்துக்களில் எங்களுக்கு உடன்பாடில்லை. இட ஒதுக்கீடு வளர்ச்சியை பாதிக்கும் என்று ஜவஹர்லால் நேரு சொன்னதை நாங்கள் மறக்கவில்லை இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு கொடுப்பது முட்டாள்களுக்கு ஆதரவு கொடுப்பதற்கு சமம் என்று ராஜீவ் காந்தி குறிப்பிட்டிருக்கிறார்.” என்று பேசினார்.