கிராமப்புற சீனாவில் 'ஒரு நாள் திருமணம்' பிரபலமாகிக் கொண்டு வருகிறது. ஹெபெய் மாகாணத்தின் கிராமப்புறங்களில், மூதாதையரின் கல்லறையில் சில சடங்குகளை நடத்தும் உரிமைகளைப் பெற ஆண்ளுக்கு திருமணம் ஆகி இருக்க வேண்டும் என்று மதச் சம்பிரதாயங்கள் கூறுகிறது. சீனாவை பொறுத்த வரையில் அவர்களின் மதச் சடங்குகள் இந்தியர்களை விட பல மடங்கு நிறைய நம்பிக்கைகளை கொண்டுள்ளது. சீனர்கள் எப்போதும் தங்கள் முன்னோர்களை மதித்து நிறைய சடங்குகளையும் அடிக்கடி அவர்களின் ஆன்மாவை திருப்திப் படுத்த படையலையும் போட்டு ஆசி பெறுகிறார்கள்.
ஹெபெய் மாகாண மக்களின் நம்பிக்கையின்படி அவர்கள் இறந்ததும், தங்களது முன்னோர்களை அடைய வேண்டும் என்றால், அவர்கள் திருமணம் செய்து இருக்க வேண்டும். இறந்த பிறகு தங்கள் மூதாதையருடன் சேர வேண்டும் என்பதற்காக ஒரு நாள் திருமணம் செய்து கொள்கிறார்களாம்.
அங்குள்ள வழக்கத்தின் படி திருமணம் செய்து கொண்டு மனைவி, குடும்பத்துடன் வாழாத ஆண்கள் உயிரிழந்தால் அவர்களின் குடும்ப கல்லறையில் அவர்களைப் புதைக்க முடியாது. அதனால் அவர்களால் மூதாதையருடன் சொர்க்கத்தில் சேர முடியாது. சொர்க்கத்தில் மூதாதையருடன் இணைய வேண்டும் என்றால் ஆண்கள் அனைவரும் மணமானவர்களாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இதனால் ஏற்படும் பாவம் பல தலைமுறைகளுக்கு அவர்களை தொடரும் என்பது அவர்களின் நம்பிக்கையாக உள்ளது. முந்தைய காலத்தில் இறந்தவர்களை கூட உயிருடன் உள்ளவர்கள் சடங்குக்காக திருமணம் செய்வார்களாம் சீனர்கள்.
தற்காலத்திலும் வறுமையின் காரணமாக வசதி இல்லாத ஆண்களுக்கு சீனாவிலும் மணப்பெண் கிடைப்பது அரிதாகி விட்டது. இதிலும் இந்தியா கூட போட்டியா? இதனால் பல ஆண்கள் திருமணம் செய்யாமல் காலத்தை கழிக்கின்றனர். ஆயினும் மதச்சடங்குகள் மீது நம்பிக்கை வைத்து ஒருநாள் திருமணம் செய்து கொள்கின்றனர். இந்த திருமணம் சட்டப்படி செல்லாது என்றாலும் சீனாவில் நடைபெறுகிறது.
காலையில் வாடகைப் பெண்களை வைத்து திருமணம் செய்கிறார்கள். பெரும்பாலும் பார்லர் பெண்கள், வறுமையில் வாடும் பெண்கள் தான் ஒரு நாள் திருமணத்திற்காக மணப்பெண்களாக வருகிறார்கள். இதற்கு என்று சில நிறுவனங்களும் உள்ளன. இந்திய மதிப்பில் ₹40,000 - ₹50,000 வரை கட்டணம் வாங்குகிறார்கள். திருமணம் முடிந்ததும் நேரே மூதாதையரின் நினைவிடத்திற்கு சென்று ஆசி பெறுகிறார்கள். இதனால் முன்னோர்கள் அவருக்கு திருமணம் ஆகி விட்டது என்று நினைப்பார்களாம். எப்படி எல்லாம் ஏமாத்துறாங்க?
அதன் பிறகு ஒரு நாள் மணப்பெண் பணத்தை வாங்கி விட்டு டாடா காட்டிவிட்டு போய் விடுவாளாம். இந்த நிகழ்ச்சியில் மணப்பெண் தன் அடையாளம் தெரியாத அளவில் மேக்கப் போட்டு இருப்பார்களாம். பல பெண்கள் தங்கள் வீட்டிற்கு தெரியாமல் பகுதி நேரமாக இந்த வேலையையும் செய்கிறார்கள். தற்போது சீனாவில் இந்த ஒரு நாள் திருமணம் தான் பேசு பொருளாகி உள்ளது.