மின்வாரிய அதிகாரிகள் நுகர்வோர்களிடம் இருந்து கூடுதல் தொகை கேட்பதை தவிர்க்க வேண்டும் என மின்வாரிய ஊழியர்கள் தொழிற்சங்க மத்தியக் குழு உறுப்பினர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
புதிய வீடு கட்டும் நபர் முதற்கட்டமாக ஆழ்குழாய் அமைத்து அதிலிருந்து தண்ணீரை பயன்படுத்த மின்வாரிய அலுவலகத்தை அணுகி, தற்காலிக வணிக பயன்பாட்டுக் கட்டணம் மற்றும் முன்வைப்புத் தொகை செலுத்த வேண்டும். இது நிர்வாக ரீதியான கட்டணம்.
ஆனால் மின் கம்பம் ஏற்றி வரும் வாகன வாடகை, குழி தோண்ட பொக்லைன் செலவு, மின் இணைப்பு வழங்க வரும் ஊழியர்களுக்கு தேநீர், சிற்றுண்டி, மதிய உணவுக்கு உரிய தொகை, இதுதவிர சிறப்பு ஊக்கத் தொகை என மின் இணைப்பு பெறும் நுகர்வோருக்கு குறைந்தபட்ச செலவு ரூ.25 ஆயிரம் வரை ஆகிறது. இதேபோல் விவசாயிகள் தங்கள் விளைநிலத்தில் மின் இணைப்பு பெற நிர்வாக ரீதியான கட்டணங்களை செலுத்தினாலும், மேற்கூறியவற்றில் இருமடங்கு செலவு செய்ய வேண்டியிருக்கும்.
இது தொடர்பாக தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் தொழிற் சங்க மத்தியக் குழு உறுப்பினர் ராஜேந்திரன் கூறுகையில், மின் இணைப்பு பெற வரும் நுகர்வோருக்கான தளவாட பொருட்கள் அனைத்தும் மின் வாரியம் தான் வழங்க வேண்டும். நுகர்வோரிடம் கூடுதல் தொகை கேட்பதை தவிர்த்து விடுங்கள் என்று ஊழியர்களிடம் அறிவுறுத்தி வருகிறோம்.
நுகர்வோரும் கூடுதல் பணம் கொடுப்பதை நிறுத்த வேண்டும். இது தவிர ஒப்பந்த பணியாளர்கள் மூலம் சில இடங்களில் இதுபோன்ற பணிகள் மேற்கொண்டு வரு கின்றனர். மின்வாரியம் ஒப்பந்ததாரருக்கு அதற் குரிய செலவினத் தொகை வழங்க காலதாமதம் செய்யும் சூழலில் ஒப்பந்ததாரர் நுகர்வோரிடம் பணம் கேட்கும் நிலை உள்ளது. இதையும் மின்வாரியம் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.