கடந்த மே 5 ஆம் தேதி நடந்த நீட் தேர்வு முடிவுகளில் முறைகேடு நடந்துள்ளதால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், நீட் தேர்வு முடிவுகள் அடிப்படையிலான இளங்கலை மருத்துவ கல்விக்கான கலந்தாய்வை தொடங்க எவ்வித தடையும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவு தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுத்தோறும் நடத்தப்படும் இந்த நீட் தேர்வு, இந்த ஆண்டு கடந்த மே 5 தேதி அன்று நடத்தப்பட்டது. இந்த தேர்வை 23 லட்சம் பேர் 4750 மையங்களில் எழுதினர். 13 மொழிகளில் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வு நடத்தப்பட்டது.
தேர்வு முடிந்த சில தினங்களிலே, நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாக இணையத்தில் தகவல் வெளியாகியது. இதனை எதிர்த்து, இவ்வாறு கசியும் தகவல்கள் ஆதாரமற்றவை, பொய்யான தகவல் என்றும் ஒவ்வொரு வினாத்தாளுக்கும் கணக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்தது.
அதனையடுத்து, கடந்த ஜூன் 4 ஆம் தேதி அன்று நீட் தேர்வுக்கான முடிவுகள் வெளியாகின. இந்த தேர்வில் ஒரு கேள்விக்கு விடை சரி என்றால் 4 மதிப்பெண்களும் விடை தவறு என்றால் 5 மைனஸ் மதிப்பெண்களும் வழங்கப்படும். மேலும் இந்த தேர்வில் 67 மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் கடந்த ஜூன் 4 வெளி வந்த தேர்வு முடிவுகளில் மாணவர்கள் 718, 719 ஆகிய மதிப்பெண்களை பெற்றுள்ளனர். தவறான 1 கேள்விக்கே 5 மதிப்பெண்கள் மைனஸ் செய்யப்படும் என்றால் 715 மதிப்பெண்கள் அல்லவா பெற வேண்டும் என்ற கேள்வி எழுந்தது.
இதற்கு பதில் கூறும் விதமாக தேசிய தேர்தல் முகமை, "தேர்தல் நேரங்களில் ஏதேனும் காரணங்களுக்காக நேரம் வீணாகும் போது அதற்கு ஈடாக கருணை மதிப்பெண் வழங்கப்படும். எனவே இவ்வாறு வழங்கப்படும் மதிப்பெண்கள் அதன் அடிப்படையில் தான். மேலும் இதற்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கே இந்த சலுகை வழங்கப்படும்" என்றது. ஆனால் இதுக்குறித்து மேலும் எழுந்த கேள்விகளுக்கு தேசிய தேர்தல் முகமை விளக்கம் அளிக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த மே மாதம் நடந்த நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. எனவே அந்த தேர்வை ரத்து செய்து, புதிய தேர்வு நடத்த வேண்டும் என மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்த போராட்டம் சென்னை, திருச்சி, கோவை, மதுரை, தூத்துக்குடி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. மேலும் இந்த போராட்டத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்களை அப்புறப்படுத்தும் போது மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஆகி அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.
இந்த சூழலில், நீட் தேர்வு பிரச்சனையை குறித்து, விசாரித்த உச்ச நீதிமன்ற விடுமுறை கால இரு நீதிபதிகளான விக்ரம் நாத் மற்றும் அஹ்ஸானுதீன் அமானுல்லா, "இந்தத் தேர்வின் நோக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு அதற்கான பதிலை தேசிய தேர்வு முகமை வழங்க வேண்டும். அந்த வகையில் விளக்கம் கேட்டு என்டிஏ - வுக்கு நாங்கள் நோட்டீஸ் அனுப்புகிறோம். ஆனால் கவுன்சிலிங் தொடங்கப்படும். கவுன்சிலிங்கை நாங்கள் நிறுத்தவில்லை." என்று தெரிவித்திருக்கின்றனர். அதோடு, நீட் தேர்வு தொடர்பான அனைத்து வழக்குகளும் ஒன்றாக சேர்த்து விசாரிக்கப்படும் என கூறி, இது தொடர்பான அணைத்து வழக்குகளையும் ஜூலை 8க்கு ஒத்தி வைத்துள்ளனர். எனவே இளங்கலை மருத்துவ கல்விக்கான கலந்தாய்வு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.