செய்திகள்

அடிப்படை வசதிகள் கேட்டு சாப்பாட்டுத் தட்டுடன் மாணவர்கள் போராட்டம்!

கல்கி டெஸ்க்

மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு தங்கும் விடுதிகளும் உள்ளன. அதில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் தங்கிப் பயிலும் அம்பேத்கர் விடுதியில் சமீப காலமாக வழங்கப்படும் உணவுகள் மிகவும் தரம் குறைந்தவையாக உள்ளன என மாணவர்களிடையே புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை அம்மாணவர்களுக்குக் கொடுக்கப்பட்ட உணவு மிகவும் தரமில்லாது இருந்ததால் அந்த உணவு பாத்திரம் மற்றும் தங்களின் சாப்பாட்டுத் தட்டுடன் அருகில் இருக்கும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்த மாணவர்கள், தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துத் தரக் கோரியும், தரமான சாப்பாடு வழங்கக் கோரியும் அந்த அலுவலகத்தின் எதிரில் சாப்பாட்டு பாத்திரம் மற்றும் தட்டுகளுடன் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.

இதனைத் தொடர்ந்து காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து காவல் அதிகாரிகளும், அம்பேத்கர் கல்லூரி விடுதி மற்றும் மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களோடு அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பேசிய மாணவர்கள், தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துத் தரக் கோரியும், தரமான உணவு வேண்டும் எனவும், விடுதி வார்டன் தங்களை தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும், மிரட்டும் தோணியில் அடிக்கப் பாய்வதாகவும் புகார் தெரிவித்தனர்.

பேச்சுவார்த்தையின் முடிவில், இனி விடுதியில் தரமான உணவு வழங்குவதாகக் கூறிய உத்தரவாதத்தைத் தொடர்ந்து, கல்லூரி மாணவர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

DC Vs RR: ப்ளே ஆஃப் செல்லுமா ராஜஸ்தான் அணி?

மாதாந்திர வருவானம் கிடைக்கும் அஞ்சல் அலுவலகத்தின் சூப்பர் திட்டம்!

சகல ஐஸ்வர்யத்தைப் பெற்றுத் தரும் சாம்பிராணி தூபம்!

முடிவுக்கு வருகிறதா இஸ்ரேல் – பாலஸ்தீன போர்!

இனி Google சாப்டர் கிளோஸ்... புதிய சர்ச் என்ஜினை அறிமுகம் செய்யும் OpenAI!

SCROLL FOR NEXT