வாஜ்பாய் காலத்தில் இருந்தே பாஜகவின் முக்கியத் தலைவராக இருந்தவர் சுஷ்மா ஸ்வராஜ். மோடி அமைச்சரவையிலும் அவர் வெளியுறவுத் துறை அமைச்சராக செயல்பட்டார். சமூக ஊடகங்கள் வாயிலாகவே அயல்நாடுகளில் வாழும் இந்தியர்கள் பலரது பிரச்னைகளைத் தீர்த்துவைத்து பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பாராட்டுப் பெற்றார். கடந்த 2019ல் சுஷ்மா ஸ்வராஜ் மறைந்தார்.
டெல்லி முதலமைச்சராகப் பணியாற்றிய சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜ் இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் புது டெல்லி பாராளுமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அவருக்கு வயது நாற்பது.
பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவின் மிக முக்கியமான தலைவர்கள் அடங்கிய பாஜகவின் முதலாவது வேட்பாளர் பட்டியலிலேயே பன்சூரி ஸ்வராஜின் பெயரும் இடம்பெற்றிருந்தது என்பது கவனிக்கத்தக்கது.
தற்போது டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றுகிறார். இங்கிலாந்தின் வார்விக் பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கியம் படித்த பன்சூரி ஸ்வராஜ், அடுத்து ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்றார். 2007ம் ஆண்டு முதல் வழக்கறிஞராகப் பணியாற்றிவரும் பன்சூரி தனது சொந்த மாநிலமான ஹரியானாவில் கூடுதல் அட்வகேட் ஜெனரலாகப் பணியாற்றியவர்.
கடந்த ஆண்டில் டெல்லி அரசியல் மீது ஆர்வம் காட்டத் தொடங்கினார் பன்சூரி. அவரை பாஜக சட்டப் பிரிவின் இணை ஒருங்கிணைப்பாளராக நியமித்தது. அதனைத் தொடர்ந்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும், அவரது ஆட்சியயும் கடுமையாக விமர்சனம் செய்தபோது, இவர் மீது மீடியா வெளிச்சம் அதிகமாக விழுந்தது.
தற்போது புது டெல்லி பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரசும், ஆம் ஆத்மி கட்சியும் சேர்ந்து பொது வேட்பாளராக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த தற்போதைய எம்.எல்.ஏ. சோம்நாத் பாரதியை நிறுத்தி இருக்கிறார்கள்.
“அரசியலில் என் அம்மாதான் எனக்கு இன்ஸ்பிரேஷன்! அவர் எனக்கு அம்மா மட்டுமில்லை; நெருக்கமான தோழி! வழிகாட்டி! அவர் டெல்லி யூனியன் பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்தவர். எனக்கு, இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் டெல்லியில் போட்டியிட கட்சி வாய்ப்பளித்துள்ளது! நான் வெற்றி பெறுவது உறுதி“ என்று அடித்துச் சொல்கிறார் சுஷ்மா ஸ்வராஜ் ஜூனியர்!