தைவானில் நேற்றிலிருந்து இன்று காலை வரை தொடர்ந்து 80க்கும் மேற்பட்ட முறைகள் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளன. இதனால், மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு தீவு நாடுதான் தைவான். தைவான், புவியின் இரண்டு டெக்டானிக் அடுக்குகள் சந்திக்கும் இடத்தில் உள்ளதால், அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும். அந்தவகையில், நேற்று மாலை ஐந்து மணியிலிருந்து இன்று காலை வரை, அதாவது 24 மணி நேரத்திற்கும் குறைந்த நேரத்தில் 80க்கும் மேற்பட்ட முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தைவானின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகபட்சமாக 6.3 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், தலைநகர் தைபே உட்பட பல இடங்களில் கட்டடங்கள் குலுங்கின. இதனால், உயரமான கட்டடங்களில் இருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வீதிக்கு வந்தனர். ஹூலைன் மாகாணத்தை மையமாகக்கொண்டுதான் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் சுமார் 10.7 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதே இடத்தில்தான் கடந்த ஏப்ரல் 3ம் தேதி ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் சுமார் 14 பேர் உயிரிழந்தனர்.
அந்தவகையில் அங்கு ஏப்ரல் 3ம் தேதியிலிருந்து தொடர்ந்து நிலநடுக்கங்கள் அவ்வப்போது ஏற்பட்டு வருகின்றன. ஏப்ரல் 3ம் தேதிக்கு பிறகு தற்போதுதான் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், இந்த நிலநடுக்கத்தில் எந்த ஒரு உயிர்சேதமும் இல்லை என்று தெரியவந்துள்ளது. அதேபோல், கட்டடங்களும் லேசான அளவே சேதம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
இப்படி அடிக்கடி தைவானில் நிலநடுக்கம் ஏற்படுவதால், அங்கு பள்ளி குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவருக்குமே விழிப்புணர்வு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், இதுபோன்ற சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் அவ்வப்போது உயிர் சேதங்கள் இருந்துதான் வருகின்றன.
கடந்த 2016ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 100க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். அதேபோல், 1999ம் ஆண்டு 7.7 ரிக்டர் அளவு பதிவான நிலநடுக்கத்தால் சுமார் 2,400 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.