2023-24-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றனஎன தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மாணவர்களின் ஆராய்ச்சி திறமையை மேம்படுத்தவும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தவும் மாநில அளவில் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி கலை மற்றும் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் படிக்கும் 60 மாணவர்களுக்கும் மற்றும் அறிவியல் பாடப்பிரிவை சேர்ந்த 60 மாணவர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும். முதல் இரண்டாண்டுகள் மாணவர்களுக்கும் ரூ.25,000 மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ.28,000 ஊக்கத்தொகை 12 மாதங்களுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
கலை, மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் பாடப்பிரிவுகளில் 60 மாணவர்கள் மற்றும் அறிவியல் பாடத்தில் 60 மாணவர்கள் என மொத்தம் 120 மாணவர்களை மாநில அளவில் தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டுத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முதலமைச்சரின் ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவித்தொகை தகுதித்தேர்வுக்கான இந்த தேர்வில் துறை சார்ந்த கேள்விகள் தான் கேட்கப்படும். அதில் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களே உதவித்தொகை பெறுவதற்கு தகுதிபெறுவார்கள்.
அந்தவகையில் இந்த ஆண்டிற்கான தகுதித் தேர்வு விண்ணப்பிப்பதற்கான தகவல் கடந்த அக்டோபர் 16ம் தேதி அறிவிக்கப்பட்டது. விண்ணப்பதாரர்கள் (https://trb.tn.gov.in/) என்ற இணையத்தளம் வாயிலாக நவம்பர் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.