கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவையில் பட்டப்பகலில் கோகுல் மற்றும் சத்யபாண்டியன் என இருவர் ரவுடிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கோவை மாநகரக் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தனிப்படை ஒன்றை அமைத்து கொலையாளிகளைக் கண்டுபிடிக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவின்பேரில் காவல் துறையினர் சில ரவுடிகளைக் கைது செய்து விசாரித்ததில் அவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிடுவது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் பயங்கர ஆயுதங்களுடன் வீடியோ வெளியிடும் நபர்களைக் குறித்த பட்டியலைத் தயார் செய்து அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கினர். இதன் அடிப்படையில் ஒரே நாளில் பத்து ரவுடிகள் உட்பட மொத்தம் நாற்பது ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இந்த அடிப்படையில் தேடப்பட்டு வந்தவர்தான் தமன்னா. இவர் சமீபத்தில் புகை பிடித்தபடி பயங்கர ஆயுதங்களுடன் கானா பாடலைப் பாடியபடி ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வந்தது. அதைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிவு செய்த தனிப்படை போலீசார் அவரைத் தேடி வந்தனர். இந்த நிலையில்தான் சேலம் அருகே தமன்னாவை போலீசார் கைது செய்து உள்ளனர். தற்போது போலீஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
பயங்கர ஆயுதங்களுடன் சமூக வலைதளத்தில் வீடியோ வெளிட்ட தமன்னா ஏற்கெனவே கஞ்சா வழக்கில் சிறைக்கு சென்று வெளிவந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அவர் விரைவில் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிகிறது.