திருமலை திருப்பதியில் அருளும் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாளை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்களின் வருகை அதிகரிப்பால் இந்தத் திருத்தலம் மாசு படக்கூடாது என்பதில் தேவஸ்தானம் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. திருமலை திருப்பதிக்கு வருகை தரும் பக்தர்கள் பெருமாளை தரிசித்த பிறகு அக்கோயிலின் அருகில் உள்ள பல்வேறு சிறு சிறு ஆலயங்களையும் தரிசிக்க ஏதுவாக தேவஸ்தானம் சார்பில் பேருந்து இயக்கப்படுகிறது. இந்தப் பேருந்துகள் பெட்ரோல் எரிபொருள் கொண்டே இதுவரை இயக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் திருமலை திருத்தலம் பெட்ரோல் எரிபொருளினால் இம்மலைக் காற்று மாசுபடக் கூடாது என்பதற்காக ஹைதராபாத்தைச் சேர்ந்த மேகா இன்ஜினியரிங் நிறுவனம் பத்து எலக்ட்ரிக் பேருந்துகளை திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு காணிக்கையாக வழங்கி உள்ளது. ஒரு பேருந்தின் மதிப்பு 1.8 கோடி ரூபாய் ஆகும். அந்த வகையில் பத்து பேருந்துகளின் மதிப்பு 18 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரி சுப்பா ரெட்டிகூறுகையில், “திருமலையில் காற்று மாசு படிவதைத் தடுப்பதற்காக இந்தப் பேருந்துகள் காணிக்கையாக வழங்கப்பட்டு உள்ளன. அதேபோல், ஏற்கெனவே திருமலையில் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளது. லட்டு பிரசாதங்களைக் கொடுப்பதற்குக் கூட பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக சணல் பைகளையே தந்து கொண்டிருக்கின்றோம். மேலும், காற்றின் மாசுபாட்டைக் குறைப்பதற்காக தேவஸ்தானப் பணிகளை கவனிக்கும் அதிகாரிகளுக்கு 35 பேட்டரி கார்களை வழங்கியுள்ளோம்” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், ‘மேகா இன்ஜினியரிங் நிறுவனம் திருமலை தேவஸ்தானத்துக்கு காணிக்கையாக வழங்கி உள்ள இந்த பத்து எலக்ட்ரிக் பேருந்துகளும் திருமலையில் பக்தர்கள் இலவசமாகப் பயணம் செய்து பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்ப்பதற்குப் பயன்படுத்தப்படும்’ என்றும் அவர் கூறினார்.