கேரள இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில் அடா சர்மா நடித்துள்ள 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தின் டீசர் கடந்த 3-ந்தேதி வெளியாகி கேரளாவில் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது .
கடந்த 3-ம் தேதி இந்தப் படத்தின் டீசர் வெளியாகி இருந்தது. சுமார் 1.19 நிமிடங்கள் ஓடும் இந்த டீசரில் ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர் தன் கதையை பகிர்கிறார். அதில் எப்படி கேரளாவில் பெண்கள் பிற மதத்திற்கு மாற்றப்படுகிறார்கள் என்பது குறித்து பேசுகிறார். அதோடு சுமார் 32,000 பெண்கள் சிரியா, ஏமன் போன்ற நாடுகளில் புதையுண்டு இருப்பதாகவும். ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் தள்ளப்படுவது குறித்தும் பேசுகிறார்.
டீசரில் பர்தா அணிந்து தோன்றும் அடா சர்மா, தான் மதமாற்றம் செய்யப்பட்டு தீவிரவாதியாக மாற்றப்பட்டுள்ளதாகக் கூறி பொய்யான தகவல்களை உண்மைபோல் முன் வைத்துள்ளதாகவும், கேரளாவை தவறாகச் சித்தரிப்பதாகவும் தெரிவித்து இந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தணிக்கைக்குழுவில் புகார் செய்யப்பட்டது.
மேலும், இப்படத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஹைடெக்செல் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஒரு பிரிவினரின் மத உணர்வுகளை புண்படுத்துவது மற்றும் கலவரத்திற்கு அழைப்பு விடுப்பது போன்ற கருப்பொருள் படத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கேரளா டிஜிபி அனில்காந்த திருவனந்தபுரம் நகர போலீஸ் கமிஷனருக்கு வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இதுதான் இப்போது சர்ச்சையை எழுப்பி உள்ளது. கேரளாவை சேர்ந்த பலரும்இதற்கு தடை வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில், இப்போது இந்த படத்திற்கு தடை கோரி காங்கிரஸ் தரப்பிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவர் விடிசதீசன் தெரிவித்துள்ளார். “நான் அந்த டீசரை பார்த்திருந்தேன். அதில் சொல்லப்பட்டுள்ள கருத்துகள் முற்றிலும் தவறானவை. கேரளாவில் அதுபோல எதுவும் நடக்கவில்லை. மற்றமாநிலங்களுக்கு முன்னர் கேரள மாநிலத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில்இது உள்ளது. வெறுப்புணர்வு பரப்பும் வகையில் உள்ள இதனை தடை செய்யவேண்டும். திரைப்படங்களுக்கு தடை விதிப்பதற்கு நாங்கள் எதிரானவர்கள். ஆனால், இது சமூகங்களுக்கு இடையே சிக்கலை உருவாக்கும். அதனால், இந்தப்படத்தை தடை செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.
இந்த டீசரில் சொல்லப்பட்டுள்ளது போல எந்தவொரு வழக்கோ அல்லது பதிவோ மாநில போலீசாரால் பதிவு செய்யப்படவில்லை. மத்திய புலனாய்வு பிரிவினர் வசம் இது குறித்த தகவல் இருந்தால் அதை பொது பார்வைக்கு கொண்டு வரலாம். ஐஎஸ் அமைப்புக்கு கேரளாவில் ஆள் சேர்க்கை நடைபெறுவதாக இதில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அடா சர்மா யார்? என்று பார்த்தால் நம்ம ஊர் சிம்புவின் 'இது நம்ம ஆளு' படத்தில் குத்துப்பாடலுக்கு டான்ஸ் ஆடியவர், இந்தி நடிகையான அடா சர்மா. 'சார்லி சாப்ளின் 2' படத்திலும் நடித்திருந்தார்.
எது எப்படியோ கேரளாவை பரபரப்பாக்கியுள்ளது இந்த "தி கேரளா ஸ்டோரி" டீசர்.