இரண்டாம் உலகப்போரினால், தடைப்பட்ட தனது படிப்பை, இப்போது தனது 105வது வயதில் முடித்து பட்டம் பெற்றுள்ளார் ஒரு மூதாட்டி.
சாதிப்பதற்கு வயதில்லை என்ற பொன்மொழிக்கு அவ்வப்போது உலகம் முழுவதும் எதாவது ஒரு சம்பவம் நிகழ்ந்துக்கொண்டுதான் வருகிறது. சிலர் எவ்வளவு வயதானாலும், மனதின் திடத்துடன் படிப்பிலும், வேலையிலும் சாதித்து வருகின்றனர்.
அப்படி சாதிப்பவர்களே உலக மக்கள் அனைவருக்கும் முன்னுதாரணமாக இருக்கிறார்கள். அந்தவகையில் தற்போது மற்றொரு முன்னுதாரணம் நமக்கு கிடைத்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர், வயதான ரயில் ஓட்டுநர் என்ற பெருமையை பெற்றார் 81 வயதான மூதாட்டி, அவருக்கு தற்போது 105 வயதாகிறது.
இந்த வயதில் மீண்டும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார் இந்த மூதாட்டி. அமெரிக்காவில் ஸ்டேன்போர்ட் பல்கலைகழகத்தில் நேற்று பட்டமளிப்பு விழா நடந்தது. இந்த விழாவில் சும்மா கெத்தாக அந்தப் பாட்டி நடந்து வந்து பட்டத்தை வாங்கிக்கொண்டார்.
இரண்டாம் உலகப்போர் சமயத்தில், 1940ம் ஆண்டு கின்னி என்பவர் தனது இளங்கலை பட்டத்தை ஸ்டேன்போர்டில் பெற்றார். ஆனால் அதன்பின்னர் அவரது காதலன் உலகப்போரில் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டதால், முதுகலை படிப்பின் ஆய்வில் இருந்த கின்னி, அதை பாதியிலேயே விட்டுவிட்டு காதலனுடன் சென்று, அவருடைய பணிக்கு உதவியாக இருந்தார்.
எனவே தற்போது 83 ஆண்டுகளுக்கு பிறகு தனது ஆய்வை வெற்றிகரமாக முடித்த கின்னிக்கு, முதுகலைப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. பட்டத்தை வாங்கிக்கொண்ட கின்னி, பின் இதுகுறித்து பேசுகையில், “Oh My God! முயற்சி செய்தால் எல்லோரும் மேல் படிப்பு பெறலாம்.” என்று சுருக்கமாகவும் இனிமையாகவும் பேசினார்.
பல கடின உழைப்புக்கு பிறகும், சாதனைகளுக்கும் பிறகும் மேற்படிப்பை பெற்றுவிட வேண்டும் என்று அவர் நினைத்தபோதே சாதித்துவிட்டார் என்றுதான் கூற வேண்டும். இப்போது அந்தப் பட்டத்தைப் பெற்றதன் மூலம் அவருடைய சாதனை முழுமையடைந்து, உலக மக்கள் அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக மாறியுள்ளார், கின்னி.